போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்
ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது
நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.
- மனுஷ்யபுத்திரன்
காதலோ, நட்போ, உறவோ, உயிரோ எதுவாயினும், நாம் நேசித்த அல்லது நம்மை நேசித்த ஒன்று இல்லாமலாகும் போது இப்படி ஒரு வெற்றிடம் உருவாவது தவிர்க்க முடியாததாகிறது. அகப்பட்ட இரையை வெகு நிதானமாய் விழுங்கத் தொடங்கும் பாம்பைப் போல… வெட்டுப்பட்ட காயத்தினின்று உடலெங்கும் பரவத் தொடங்கும் வலியைப் போல, வாழ்வின் எஞ்சிய பகுதிகள் அனைத்திலும் விரவத் துவங்குகிறது இழப்பின் துயரம்.
"வெளியெங்கும் நினைவின் திறவுகோல்கள்" என்பார் சித்தார்த். நிஜம் தான். மண்ணூன்றிக் காத்திருந்த வித்து மழையின் எந்தத் துளி பட்டு முளைவிட்டதென்பதை அறியவியலாதது போலவே, மனதில் புதைந்த துயரங்கள் நினைவின் எந்தக் கொழுமுனையில் சிக்கி மேலெழும் என்பதை எவராலும் அறிய முடிவதில்லை. எங்கெங்கோ அறுபட்டு விழுந்த நினைவின் கண்ணிகளை, எதோவோர் புள்ளியில் நின்றபடி இடையறாது கோர்க்க முயன்று கொண்டேயிருக்கிறது மனதின் மாயக் கரம் ஒன்று.
எங்கு சென்றாலும் சமுத்திரத்தின் இரைச்சலை சுமந்து செல்லும் சங்குகளைப் போன்றே எத்தனை ஆண்டுகள் கடந்தும் மனித உணர்ச்சிகளை சுமந்து திரியும் நம் செவ்விலக்கியங்கள் அதிகம் பிரதிபலிப்பது இழப்பின் பெருவலியை மட்டுமே என்பேன் நான். சங்க இலக்கியங்களில் பிரிவையும் இழப்பையும் சொல்லும் பாலைப் பாடல்களே மிகுதியும் இடம்பெற்றிருப்பதற்கான காரணம் எதுவாக இருக்கக் கூடும்? 'சொற்களின் அகல் ஏற்றி எத்தனை திருக்கார்த்திகை!' என்பார் கல்யாண்ஜி. எத்தனை முறை மாய்ந்து மாய்ந்து சொன்னாலும் வலிகளை வார்த்தைகளில் வடிப்பது சிரமம் தானில்லயா? மீண்டும் மீண்டும் சொல்ல முயன்று சொல்ல முடியாமல் போன இயலாமை தான் நம் முன்னால் பாடல்களாய் உருப்பெற்றிருக்கின்றனவோ? அப்படி ஒரு இயலாமையின் பரு வடிவம் தான் இந்தப் பாடலும்.
"இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?"
- புறம் 242
வலிமையான வேலும் வீரமும் கொண்ட சாத்தன் என்பவன் இறந்துவிட்டான். அவன், 'ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்தவன்'. ஆண்மை என்ற சொல்லுக்கு ஆளும் தன்மை என்பதே சரியான பொருள். ஆள்வது என்பது அடக்குமுறையோ அடிமைப்படுத்துவதோ அல்ல. அன்பாலும் அழகாலும் குணத்தாலும் திறமையாலும் மனத்தாலும் மொழியாலும் நம்மை தினமும் ஆள்பவர்கள் எத்தனையெத்தனை பேர்! அப்படி ஆளும் தன்மையே ஆண்மை. அத்தகைய ஆண்மை விளங்க, தன்னையொத்த பிற ஆடவர்களை எல்லாம் கடந்து முதன்மையானவனாய் முன் நின்ற சாத்தன் என்பவன் இறந்து போய் விட்டான்.
அவனை இழந்த துக்கம் ஊர் மக்களை இருள் போல் சூழ்ந்திருக்கிறது. ஒல்லையூர் என்னும் அவ்வூரிலிருக்கும் எந்த இளம் பிள்ளைகளும் இன்று பூப்பறித்து சூடிக் கொள்ளப் போவதில்லை. வளையல்களை அணிந்த மகளிர் எவரும் பூக்கொய்து தொடுக்கப் போவதில்லை. நல்ல யாழினை இசைக்கும் பாணனோ(இசைப் பாடகன்) அவன் துணையான பாடினியோ பூவை அணிந்து கொள்ளப் போவதில்லை. இப்படி எவருக்கும் பயனற்ற அகால வேளையில் முல்லையே நீ எதற்காகப் பூத்தாய்? என்கிறார் புலவர்.
இலையில் தேங்கிய மழைத்துளிகளாய் பாடலின் கடைசி வரியில் எப்போதும் துயரம் சொட்டியபடியிருக்கிறது. முல்லை மலர்வதைப் பார்த்ததுண்டா நீங்கள்? முதலிரண்டு இதழ்கள் விரிந்ததும் அம்முகையில் ஒரு மென்னகை.. மெல்லியதாய் ஒரு முறுவல் தோன்றுவது போலிருக்கும்! ஊர் முழுவதும் சோகத்தில் மூழ்கியிருப்பதை அறியாமல் அப்பூ எப்போதும் போல அன்றும் புன்னகைக்கிறது. தாய் இறந்ததை அறியாமல் அவள் அருகிலேயே சிரித்து விளையாடும் பிள்ளையைக் கண்டாற் போல பூவைக் காணுந்தோறும் புலவரின் நெஞ்சம் துக்கத்தில் விம்முகிறது.. 'முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?'
சாத்தனுக்கும் இப்பாடலை எழுதிய குடவாயிற் கீரத்தனாருக்கும் என்ன உறவென்பதற்கான தடயங்கள் எதுவும் பாடலில் இல்லை. நாற்புறமும் சட்டமிட்ட ஓவியத்தைப் போல ஒரு காட்சித் தீற்றலையும் அதிலிருந்து வானமாய் விரியும் வாசக வெளியையும் கொண்டிருக்கும் இப்பாடலை 'உலக இலக்கியத்தில் சேர வேண்டிய பாடல்' என்கிறார் எழுத்தாளர் சுஜாதா.
தன்னை ஓர் மரபுநேசன் என்று கூறிக்கொள்ளும் சுஜாதா, குறுந்தொகைக்கும் புறநானூற்றிற்கும் எழுதியிருக்கும் எளிய உரை நூல்கள், (401 காதல் கவிதைகள், புறநானூறு : ஓர் எளிய அறிமுகம்) சங்க இலக்கியத்தின் மீது முதற்கட்ட வாசிப்பை நிகழ்த்த விரும்பும் ஆரம்ப வாசகருக்கு புதிய வாசற்திறப்பாக அமையக் கூடும். (கவனம்.. இப்பரிந்துரை முதற்கட்ட வாசிப்பிற்கு மட்டுமே!)
10 கருத்துகள்:
//"வெளியெங்கும் நினைவின் திறவுகோல்கள்" என்பார் சித்தார்த்.//
ஆரு அவரு தத்துவ மேதையா?
//சங்க இலக்கியங்களில் பிரிவையும் இழப்பையும் சொல்லும் பாலைப் பாடல்களே மிகுதியும் இடம்பெற்றிருப்பதற்கான காரணம் எதுவாக இருக்கக் கூடும்? //
அந்தகாலத்திலேயே சண்டை போட்டு பிரியாம ஒற்றுமையாக குடும்பம் நடத்தவில்லை, என்று எதிர்கால சந்தியினருக்கு சொல்வதற்காக இருக்கலாம்:)
அருமை.. :)
\\குசும்பன் சொன்னது…
//"வெளியெங்கும் நினைவின் திறவுகோல்கள்" என்பார் சித்தார்த்.//
ஆரு அவரு தத்துவ மேதையா//
:)
எளிமையான விளக்கங்கள். தொடருங்கள் :)
//நான் ஆதவன்☀ சொன்னது…
எளிமையான விளக்கங்கள். தொடருங்கள் :)
//
யோவ் ஆதவா, பதிவை பார்க்காம அவுங்க இப்ப எதுக்கு விளக்கம் கொடுத்தாங்கன்னு டக்குன்னு சொல்லு, என்னமோ அவுங்க இதோட முற்றும் போட்ட மாதிரி, தொடருங்க என்று சொல்ற, அதுவும் ஸ்மைலி போட்டு சிரிச்சுக்கிட்டே. என்ன கொழுப்புய்யா உனக்கு?
சிறுவயதில் மனப்பாடச் செய்யுள் போல படித்திருந்தாலும் அழகான விளக்கங்களோடு இப்பொழுது படிக்கும்போது இந்தப் பாடல் இன்னமும் ஈர்க்கிறது.
சுஜாதாவின் புத்தகத்தை நானும் முதற்கட்டமாக இருக்கட்டும் என்று நினைத்து வாங்கிப் படித்தேன். ஆனால், பல இடங்கள் அவசரத்தில் அள்ளித் தெளித்தக் கோலம் போலவே தோன்றுகிறது.
thanks for sharing, keep continue.
Please incorporate follow blog- I do not know how to follow your blog, so that I wont miss any post on TAMIL literature.
//முதலிரண்டு இதழ்கள் விரிந்ததும் அம்முகையில் ஒரு மென்னகை.. மெல்லியதாய் ஒரு முறுவல் தோன்றுவது போலிருக்கும்! //"வெளியெங்கும் நினைவின் திறவுகோல்கள்///
பேசப் பிடிக்கும் தளங்களில் சொற்கள்தான் எவ்வளவு அழகாக விழுகின்றன
மண்ணூன்றிக் காத்திருந்த வித்து மழையின் எந்தத் துளி பட்டு முளைவிட்டதென்பதை அறியவியலாதது போலவே, மனதில் புதைந்த துயரங்கள் நினைவின் எந்தக் கொழுமுனையில் சிக்கி மேலெழும் என்பதை எவராலும் அறிய முடிவதில்லை. எங்கெங்கோ அறுபட்டு விழுந்த நினைவின் கண்ணிகளை, எதோவோர் புள்ளியில் நின்றபடி இடையறாது கோர்க்க முயன்று கொண்டேயிருக்கிறது மனதின் மாயக் கரம் ஒன்று.arumai
எத்தனை முறை மாய்ந்து மாய்ந்து சொன்னாலும் வலிகளை வார்த்தைகளில் வடிப்பது சிரமம் தானில்லயா|| mm
கருத்துரையிடுக