செவ்வாய், 15 டிசம்பர், 2009

நுழைவாயில்

'ஒத்த ரசனையுள்ளவர்கள் ஒன்றாய் இணைந்து வாழக் கிடைக்கும் வாழ்க்கை அதிர்ஷ்டவசமானது' என்பேன் நான். 'அபாரமான யதேச்சையன்றி வேறில்லை' என்பார் சித்தார்த். எதுவாயிருப்பினும் குறுந்தொகையில், இன்றளவும் இரவில் உறங்காதே விழித்திருக்கும் தலைவியுடனும்,  ஐங்குறுநூற்றில், பிள்ளைக்குப் பாலூட்டும் மனைவியைப் பின்னிருந்து ஆதுரமாய் அணைத்துக் கொள்ளும் அன்பான தலைவனுடனும், புறநானூற்றிலிருந்து 'எம்முளும் உளன் ஓர் பொருநன்' என பெருமிதக் குரலெழுப்பும் அவ்வையுடனும், மையோ மரகதமோவென ஐயப்படுத்தும் நிறங்கொண்ட இராமனுடனும், கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் காட்சி பழகிக் கிடக்கும் கோதையுடனும்,  காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் தேவாரக் குரவர்களுடனும் நாங்களும் கூடி அமர்ந்து உரையாடக் கிடைக்கும் மணித்துளிகள் ஒவ்வொன்றும் அதிஉவப்பானவை.


ஓயாது அலைவுறும் அலைகளைக் காண்கையில், 'யார் அணங்குற்றனை கடலே?' என கவலை தோய வினவத் தோன்றுவதும், தனித்திருக்கும் இரவுகளில் 'கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே' என்று குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்ள இயல்வதும், இடைப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளை முற்றிலும் இல்லாமலாக்கி விடுகின்றன இல்லையா? என்றோ எவரோ எழுதி வைத்த ஓவியத்தில் நம் முகம் இருப்பது எத்தனை ஆச்சரியகரமானது! எவருடைய சுயசரிதையிலோ நம் வாழ்க்கை இருப்பதைப் போல.. வாசிக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் இவ்விலக்கியங்கள் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும் பெருவியப்பினை, எக்காலத்தும் மனித உணர்வுகளோடு மிகவியல்பாய் அவை உருவாக்கிக் கொள்ளும் அளப்பரிய நெருக்கத்தினை எங்களால் இயன்ற அளவு இணையத்தில் பதிவு செய்யும் முயற்சியே இந்த அணிலாடு முன்றில்.


பழந்தமிழ் இலக்கியங்களின் பழமை அவற்றின் வயதில் இருக்கிறதேயன்றி அவை காட்டும் வாழ்க்கையில் இல்லை என்பது எங்களின் ஒருமித்த கருத்து. அதனால், நாங்கள் புரிந்து கொண்டவற்றை பிறருக்கும் எளிதாய்ப் புரிவிக்க வேண்டுமென்ற விருப்பு, இலக்கிய மதிப்பு ஒவ்வொன்றையும் விழிகள் விரிய சுட்டு விரல் நீட்டிச் சுட்டிக் காட்டும் வியப்பு.. இவைகளே இவ்வலைப்பூவின் அஸ்திவாரங்களாய் அமைகின்றன.


இது நானும் என் கணவர் சித்தார்த்தும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களுமாய் இலக்கியங்களின் முன்னிலையில் ஒன்றாய்ச் சந்திக்கும் களம். இலக்கியங்களைப் பகிர்ந்து கொள்ள, பரிமாறிக் கொள்ள, விளக்க, விவாதிக்க விரும்பும் அனைவருக்குமான தளம். வாருங்கள்.. உவப்பத் தலைக் கூடி உள்ளப் பிரிவோம்.


பிரியங்களுடன்...
காயத்ரி - சித்தார்த்

19 கருத்துகள்:

காயத்ரி சித்தார்த் சொன்னது…

சோதனைப் பின்னூட்டம்

பாலராஜன்கீதா சொன்னது…

வாழ்த்துகள் காயத்ரி சித்தார்த். தங்களின் (இலக்கிய) இடுகைகளை வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

குப்பன்.யாஹூ சொன்னது…

பகிர்விற்கு மிகுந்த நன்றி.

இலக்கியம் குறித்து படிக்க ஆவலாய் உள்ளேன்,

சந்தனமுல்லை சொன்னது…

வணக்கம்..நுழைவாயிலில் நின்றுக்கொண்டிருக்கிறேன்.தோரணங்கள் அழகாக இருக்கிறது..சீக்கிரம் அறைகளை சுற்றிக்காட்டுங்கள்! :-))

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அணிலாடு முன்றிலுக்கு வாழ்த்துக்கள்.. அன்னைக்கே படிச்சிட்டு பின்னூட்டமிடமுடியலயேன்னு இருந்தேன்..

நிலாரசிகன் சொன்னது…

இணையத்தில் அறிமுகமாகி இதயத்தில் இணைந்த இருவர் மீண்டும் இணையத்தில் இணைந்து செயலாற்றுவது மகிழ்வை தருகிறது. நல்லதொரு முயற்சி.மனமார்ந்த வாழ்த்துகள்.

-நட்புடன்,
நிலாரசிகன்.

காயத்ரி சித்தார்த் சொன்னது…

மதிப்பிற்குரிய பாலராஜன் கீதா.. பின்னூட்டப் பிரச்சினையை தனிமடல் மூலம் கவனத்திற்குக் கொண்டு வந்து முதல் வாழ்த்தையும் வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்!

குப்பன்.யாஹூ.. பாலைத்திணையைத் தொடந்து இங்கும் பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி. :)

காயத்ரி சித்தார்த் சொன்னது…

சந்தனமுல்லை.. உங்கள் பெயர் மற்றும் பதிவுகளைப் போலவே மிக அழகான பின்னூட்டம்.. வெகுவாய் ரசித்தோம். :) நன்றி!

முத்துக்கா.. வாழ்த்துக்கு நன்றி. சொல்ல மாட்டிங்களா கமெண்ட் போட முடியலன்னு.

நன்றி நிலா.. கவிதையைப் போலவே இருக்கிறது வாழ்த்தும். :)

☀நான் ஆதவன்☀ சொன்னது…

இருவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் :)

KVR சொன்னது…

நல்ல முயற்சி காயத்ரி & சித்தார்த். வாழ்த்துகள்.

சென்ஷி சொன்னது…

வாழ்த்துக்கள் காயத்ரி & சித்தார்த் :)

காயத்ரி சித்தார்த் சொன்னது…

ஆதவன், கேவிஆர், சென்ஷி.. நன்றி வருகைக்கும் வாசிப்பிற்கும். :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

இலக்கியத்தின் இலக்கணமறிய காத்திருக்கிறோம்..!

எளிய தமிழில் பாலைத்திணை காயத்ரியின் கவிதையை உரைநடையாக்கினால் எப்படி இருக்குமோ அப்படி கொடுத்தால் வகுப்பறை நிரம்பி வழியும்..!

எல்லாருக்கும் வயசானாதான் இது மாதிரியெல்லாம் தோணும்.. காலம் கெட்டுப் போய்க் கெடக்கு போல..

நம்ம காயூவுக்கு இப்பவேவா..?

Raju சொன்னது…

"இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?"

இந்த பாடலின் காட்சியை மனதில் விரித்தால் கண்கள் பனிக்கும்

காயத்திரி, சித்தார்த் இருவரிடம் இருந்து தமிழ் தேன் பல்கி பெருகட்டும்

இருவருக்கும் என் வாழ்த்துகள்

வேந்தன் அரசு

Raju சொன்னது…

பயம் என்றால் பயன்

”பயக்குறை” என்ற சொல்லின் ஆழமான் பொருள் என்னவோ?

அறிவன்#11802717200764379909 சொன்னது…

மனங்கவர் துணையுடன் முற்றிலும் புதுமுகமாய் வருவீர்கள் போலிருக்கிறது...

பர்ஸைத் தொலைத்து விட்டு பேருந்தில் சென்று தேடி,அடைந்து,நொந்த அனுபவத்தை கலக்கலாக எழுதிய பெண் எங்கே என்று தேட வேண்டியிருக்குமோ!

புதுமுகம் புதியமுகமாக இருப்பதும் ரசிக்கத் தக்கதுதான்!

அறிவன்#11802717200764379909 சொன்னது…

{எல்லாருக்கும் வயசானாதான் இது மாதிரியெல்லாம் தோணும்.. காலம் கெட்டுப் போய்க் கெடக்கு போல..

நம்ம காயூவுக்கு இப்பவேவா..?}

இது கலக்கலேய்ய்ய்.......

காயத்ரி சித்தார்த் சொன்னது…

உண்மைத் தமிழன் அண்ணே.. எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ சின்ன பின்னூட்டம்?? :(

வேந்தன் அரசு.. நன்றிங்க.

காயத்ரி சித்தார்த் சொன்னது…

//மனங்கவர் துணையுடன் முற்றிலும் புதுமுகமாய் வருவீர்கள் போலிருக்கிறது...//

ஆமாங்க அறிவன்.. :)

//பர்ஸைத் தொலைத்து விட்டு பேருந்தில் சென்று தேடி,அடைந்து,நொந்த அனுபவத்தை கலக்கலாக எழுதிய பெண் எங்கே என்று தேட வேண்டியிருக்குமோ!//

நானே தேடிட்டு தான் இருக்கேன். நன்றி. :)