புதன், 30 டிசம்பர், 2009

உறக்கமற்ற காத்திருப்பு.... - 2

மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.

-ஔவையார் (குறுந்தொகை 28 - பாலை - தலைவி கூற்று )


முட்டுவேனா? தாக்குவேனா? தெரியவில்லை
நானுமோர் தன்மை மிகுந்து ஆ அ ஓ என அலறுவேனா?
மெல்லிய காற்று கூட அலைக்கழிக்கும் அளவிற்கு என்னை
துக்கம் நோயாக பீடித்திருப்பதை
அறியாது உறங்கும் இந்த ஊரை என்ன செய்வேன்?
ஜார்ஜ் எல். ஹார்ட்டுடனான பேட்டி ஒன்றில் (அ. முத்துலிங்கம் எடுத்தது என நினைக்கிறேன்), இந்த பாடலைப் பற்றி பேச்சு வந்தது. பேட்டியாளர் இந்த பாடல் விரகதாபத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் காமத்தின் வெளிப்பாடே என்றார் (உண்மையில் இன்னும் கீழிறங்கி, ஒரு பெண் சுய இன்பம் கொள்வதன் விவரிப்பே இப்பாடல் என்றார்). ஹார்ட் என்ன பதிலளித்தார் என நினைவில் இல்லை. இது ஒரு வாசிப்பு.

இப்பாடலை காமத்தின் வெளிப்பாடாக காண்பது சரியா தவறா என்ற கேள்விக்கு எந்த பொருளும் இல்லை. அந்த வாசிப்பிற்கான சாத்தியங்களும் இந்த பாடலில் உள்ளன என்பது உண்மையே.

இந்தப் பாடலை சுற்றியுள்ள தகவல்களை எடுத்துக்கொள்வோம். பாலை நிலப்பாடல் இது. பாலை பிரிவிற்கான நிலம். ஆக இந்த பாடல் ஓர் பிரிவை பேசுகிறது. தலைவி கூற்றாக வரும் பாடல் இது. தலைவனின் பிரிவு துயர் தாளாத தலைவின் புலம்பல். இந்த புலம்பல் உடல் சார்ந்த வெளிப்பாடாக வருகிறது பாடலில் : முட்டுதல், தாக்குதல் என. இந்த புள்ளியிலிருந்து காமத்தை சென்றடைவது வெகு இயல்பான ஒரு வாசிப்பே....

ஆனால் எனக்கு இந்த பாடல் ஒரு தற்காலிக பிரிவை மட்டும் சொல்வதாக படவில்லை. அதனினும் ஆழமாக ஓர் பிரிவின் ஆற்றாமை தெரிகிறது அதில். இதோ இந்த வாரம் ஆழிப்பேரலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் வந்து போனது. தொலைகாட்சி செய்தியில் ஒரு காட்சியை காண்பித்தார்கள். ஆழிப்பேரலை அடித்து ஓய்ந்த மறுதினம் எடுக்கப்பட்ட காட்சி. ஓர் அறையில் பிணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்கின்றன. மெலிந்து காணப்பட்ட ஒரு பெண் அந்த அறையை சுற்றி சுற்றி வருகிறாள். அவளது கைகள் மார்பை அறைந்தபடி உள்ளன. ஐயோ ஐயோ என்ற கதறல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இன்று இந்த பாடலை படித்த பொழுது அந்த ஐயோ என்ற கதறல் அதே வீச்சுடன் ஒலித்து கனமேற்றுகிறது மனதை. இறந்தது யார் என நமக்கு தெரியாது. அவளது கணவனாக இருக்கலாம். மகனோ மகளோவாக இருக்கலாம். அல்லது இவர்கள் அனைவருமாக.

அன்றிரவு அந்த பெண் எங்கிருந்திருப்பாள்? என்ன நினைத்திருப்பாள்? அவளும் இப்படித்தானே ஆற்றாமையில் சென்று முட்டியிருப்பாள்? அவளது துயரறியாது உறங்கும் இந்த உலகே பகையாக தோன்றியிருக்காதா அவளுக்கு?

பிரிவு ஓர் இரவு மிருகம். அது தனது ஆதிக்கம் முழுவதையும் மகா வீரியத்தோடு செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் முடிவின்றி நீளும் உறக்கமற்ற இரவுகளும், விடியலுக்கான காத்திருப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் போலும்.


9 கருத்துகள்:

Ganesh Gopalasubramanian சொன்னது…

அன்பு சித்தார்த்!

மாணிக்கவாசகர் எழுதியது...
”அறிதற்கு அரிதென எளிதென”

அரிதென விடுபட்டுவிட்டதாக தெரிகிறது.

வா.மணிகண்டன் சொன்னது…

இந்த அகம் சார்ந்த பாடலை வாசிக்கும் போது நான் ஏன் இதை பாலை நிலத்திற்கான பாடல் என்று வாசிக்க வேண்டும் அல்லது தலைவியின் கூற்றாக வாசிக்க வேண்டும். வாசகனை எதற்கு அது தலைவி பாடுகிறாள், காமத்தில் பாடுகிறாள் என்றெல்லாம் ஒரு திசை நோக்கி நகர்த்துகிறார்கள்?

இது ஒரு பாடல். அது யாரோ பாடியிருக்கட்டும் எதற்காகவோ பாடியிருக்கட்டும், எனக்கு அந்தப்பாடல் மட்டுமே முக்கியம் என்னும் போது வாசக அனுபவம் விரிவடைகிறது. இல்லையா?

Thirumal சொன்னது…

// இறந்தது அவளது கணவனாக இருக்கலாம். மகனோ மகளோவாக இருக்கலாம். அல்லது இவர்கள் அனைவருமாக.//

இவ்வரிகள் செய்யுளின் மீது கனத்த சோகத்தை ஏற்றுகிறது. பகிர்வுக்கு நன்றி.
=========
அணிலாடு முன்றில் என்ற வாசகமே அழகான சித்திரம் போல உள்ளது.
உன்னதமானரசனைமிகு பதிவுகள்.

துபாய் ராஜா சொன்னது…

அருமையான பகிர்வு.

//பிரிவு ஓர் இரவு மிருகம். அது தனது ஆதிக்கம் முழுவதையும் மகா வீரியத்தோடு செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் முடிவின்றி நீளும் உறக்கமற்ற இரவுகளும், விடியலுக்கான காத்திருப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் போலும்.//

உண்மையான உண்மை.

பிரிவுத்துயர் குறித்த எனது கவிதைகள். http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_20.html

அகம் மகிழ்ந்த ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள்.

சித்தார்த். வெ சொன்னது…

குறிப்பிட்டமைக்கு நன்றி கணேஷ்.

சித்தார்த். வெ சொன்னது…

//இது ஒரு பாடல். அது யாரோ பாடியிருக்கட்டும் எதற்காகவோ பாடியிருக்கட்டும், எனக்கு அந்தப்பாடல் மட்டுமே முக்கியம் என்னும் போது வாசக அனுபவம் விரிவடைகிறது. இல்லையா?//

நிச்சயமாக மணி. சங்க கால கவிதைகளை அனுகுவதில் உள்ள சிக்கலே அதன் இறுகிய கட்டுமானம் தான். ஆனால் நவீன வாசகன் இவற்றை தாண்டி நேரடியாக கவிதையுடன் உரையாட முடியும்.

சித்தார்த். வெ சொன்னது…

நன்றி திருமால். பெயர் சரியாக கிடைக்காமலேயே இந்த திட்டத்தை நீண்ட நாள் கிடப்பில் வைத்திருந்தோம். பாற்கடல், முக்கூடல் என பல பெயர்களை தாண்டி முன்றிலில் வந்து நின்றாள் காயத்ரி. :)

நேசமித்ரன் சொன்னது…

//பிரிவு ஓர் இரவு மிருகம். அது தனது ஆதிக்கம் முழுவதையும் மகா வீரியத்தோடு செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் முடிவின்றி நீளும் உறக்கமற்ற இரவுகளும், விடியலுக்கான காத்திருப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் போலும்.//

இந்தப் பிறகான சொற்கள் மீண்டும் ஒரு முறை வாசிக்கச் சொன்னது இடுகையை

நன்றி சித்தார்த்

பெயரில்லா சொன்னது…

பிரிவு ஓர் இரவு மிருகம்.|| aamaam