செவ்வாய், 22 டிசம்பர், 2009

இரண்டாம் நுழைவாயில் (அல்லது) ஒற்றையடிப் பாதைகள்

இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் இந்த கட்டுரையை என் கணிணியில் சேமிக்க வேண்டும். கட்டுரைகளை சேமித்து வைப்பதற்கென்று “கட்டுரைகள்” என்ற அடைவை (folder) உருவாக்கி இருக்கிறேன். இந்த கோப்பை இன்றைய தேதியிட்டு அந்த அடைவினில் சேமித்து வைத்துவிடலாம். ஆனால், இக்கட்டுரையில் நான் ரசித்த சில கவிதைகள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளுக்கு என்று வேறு ஒரு அடைவு உள்ளது என் கணிணியில். கவிதைகளை அங்கு தான் சேமித்து வைப்பது வழக்கம். இக்கோப்பு ஒரே சமயம் கட்டுரையாகவும் கவிதையுமாக இருக்கிறது. இப்போது என்ன செய்ய ?

இப்பிரச்சனை நம் பெரும்பாலான பழந்தமிழ் பாடல் தொகுப்புகளுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியம் என்பது 2700 தனிபாடல்களின் தொகுப்பு. வசதிக்கான எட்டுத்தொகை என்றும் பத்துப்பாட்டு என்றும் தொகுத்து வைத்திருக்கின்றோம். ஆனால் இத்தொகுப்புகளுக்கு தேவைக்கதிகமான முக்கியத்துவத்தை அளிக்கும் தோறும் படைப்புகளின் தனித்துவத்தினை மறைக்கின்றோம். திருக்குறளை இன்னும் நீதி நூல் என்றே தொகுத்து வைத்திருக்கிறோம். மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல்தான் அதற்கு எத்தனை பாரம்! என்று ஒரு முறை எழுதினார் ஜெயமோகன். அது போல “கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது” என்ற அற்புத கவிதையின் மேல் “நீதிநூல்” என்ற அடையாளம் எத்தனை பாரமாய் தெரிகிறது... புறப்பொருளை பற்றி மட்டுமா பேசுகிறது புறநானூறு? எத்திசை செலினும் அத்திசை சோறே என்று ஔவை கூறும் பொழுது மிக மிக அந்தரங்கமான அவளது செருக்கும் அல்லவா வெளிப்படுகிறது? ”செங்களம் பட” என்று தொடங்கும் குறுந்தொகை பாடல் உக்கிரமான ஒரு போர்காட்சியை நம்முன் நிகழ்த்திக்காட்டுகிறது. சொல்லிக்கொண்டே போகலாம். படைப்புகளின் பல்வகையான அடையாளங்களை காண மறுத்து ஒற்றை அடையாளத்தை அதன் மீது ஏற்றுவது என்பது அப்படை ப்பின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாகவே இருக்கும்.

இக்கட்டுரையை என் கணிணியில் சேமிக்கும் பிரச்சனைக்கு வருவோம். இப்பொழுது என் கணிணியில் Leap என்ற ஒரு மென்பொருளை நிறுவியுள்ளேன். இது கோப்புகளின் மீது குறிச்சொற்களை ஏற்ற உதவுகிறது. இம்மென்பொருளின் துணைகொண்டு, எனது கட்டுரையின் மீது இரண்டு குறிச்சொற்களை ஏற்றிவிடலாம் - ”கட்டுரை”, “கவிதை” என்று. இனி இக்கோப்பை நான் எங்க வேண்டுமானாலும் சேமித்துக்கொள்ளலாம். இந்த கோப்பை அடைய எனக்கு இப்பொழுது இரண்டு வழிகள் உள்ளன. ”கட்டுரை” என்றோ “கவிதை” என்றோ தேடி இக்கோப்பை அடையலாம். இந்த கட்டுரையில் ஜெயமோகனின் ஒரு வரி மேற்கோள் காட்டப்படுவதால் “ஜெயமோகன்” என்ற குறிச்சொல்லையும் ஏற்றிவிடலாம்.

இதையே நம் கவிதைகளுக்கும் செய்யலாம். படைப்பு என்பது ஒரு பெருவனம். நாம் படைப்புகளை தொகுக்கும் முறை அவற்றை சுற்றி பெருமதில்களை எழுப்பி ஒற்றை நுழைவாயிலை கொஞ்சமாக திறந்து வைக்கிறது. ஒரு தனி மனிதனாக நான் அந்த பெரு வாயிலின் முன் நிற்க அஞ்சுகிறேன். திருக்குறள் ஒரு நீதிநூல், புறப்பொருள்களை பற்றி பேசுவது புறநானூறு, அகப்பொருள்களை பற்றி பேசுகிறது அகநானூறு போன்ற பொதுப்படையான அடையாளங்களை தாண்டி பார்க்க பழகிக்கொண்டால், அந்த பெரு மதில் இல்லாதாகி அந்த வனமே நம்முன் நிற்கும். வனத்திற்கு ஏது வாசல்? ஒவ்வொரு கவிதைக்கும் அதன் தனித்துவமான அடையாளங்களை குறிச்சொற்களாக ஏற்றி வைத்தால் பல்வேறு விதமான வாசிப்புகளை நிகழ்த்த ஏதுவானதாக இருக்கும். ஒவ்வொரு குறிச்சொல்லும் அந்த கவிதையெனும் வனத்தினுள் செல்லும் ஒற்றையடி பாதை. யாரும் எப்படியும் நுழையலாம். உள்நுழைந்த பின் உங்கள் வாழ்வு உங்களுக்கு அளித்த அனுபவங்களின் துணை கொண்டு புதிய பாதைகளை நீங்களே உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்.

பழந்தமிழ் பாடல்களின் மீது நானும் காயத்ரியும் நிகழ்த்தும் வாசிப்பை பதிவு செய்யவே இத்தளத்தை துவங்கியுள்ளோம். எங்களின் வாசிப்பு அந்த பாடல்களுக்குள் நுழையும் ஒற்றையடி பாதைகள் மட்டுமே. ஒரு தனி மனிதன், வனம் காண ஒற்றையடி பாதைகளே போதுமானது, பெருவழிகள் தேவையில்லை.

6 கருத்துகள்:

☀நான் ஆதவன்☀ சொன்னது…

சித்தார்த் படிக்க படிக்க லயிக்க செய்கிறது உங்கள் எழுத்து.

வனத்தின் மீதான உங்கள் ஒற்றையடி பாதை பயணம் தொடரட்டும். கேட்க ஆவலாக உள்ளேன்.

சித்தார்த். வெ சொன்னது…

நன்றி ஆதவன்.

KVR சொன்னது…

அந்த ஒற்றையடிப்பாதையில் கூட வர நாங்களும் காத்திருக்கோம் சித்தார்த்.

அருமையான எழுத்து உங்களுடையது.

நேசமித்ரன் சொன்னது…

/உள்நுழைந்த பின் உங்கள் வாழ்வு உங்களுக்கு அளித்த அனுபவங்களின் துணை கொண்டு புதிய பாதைகளை நீங்களே உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்.//

அதை வெகுவாக கிளர்த்தும் கொழுமுனை உங்கள் பேனா என்று சொல்ல வைக்கிறது உங்களின் சொல்முறை

பெயரில்லா சொன்னது…

படைப்புகளின் பல்வகையான அடையாளங்களை காண மறுத்து ஒற்றை அடையாளத்தை அதன் மீது ஏற்றுவது என்பது அப்படை ப்பின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாகவே இருக்கும். ||mm

பெயரில்லா சொன்னது…

வனத்திற்கு ஏது வாசல்? ..nice