திங்கள், 21 டிசம்பர், 2009

போர்க்களத்தில் பூத்திருக்கும் ஒற்றைப் பூ!

அன்றாட அலுவல்கள் அல்லது பிரச்சினைகளின் கரங்கள் பிடரி பிடித்து உந்த, இலக்கற்று சாலையில் விரைந்து கொண்டிருக்கையில், எதேனுமோர் வீட்டின் வாசலில் கொடியில் காயும் குட்டி குட்டி உடுப்புகளைப் பார்த்ததும் சட்டென்று இறுக்கம் தளர்ந்து மனதிற்குள்ளாக மென்மையாய்ப் புன்னகைத்துக் கொள்ளும் தருணம் என்றாவது உங்களுக்கு வாய்த்திருக்கிறதா? எவர் வீட்டு வாசலிலாவது நுழையுமுன்பாக அங்கு சிதறிக் கிடக்கும் சின்னஞ்சிறு செருப்புகளைக் கண்டதும், வெறுங்கையோடு வர நேர்ந்துவிட்ட உங்கள் மறதிக்காக நீங்கள் வருந்தியதுண்டா? சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு எளிதில் தொலைபேசி விடவோ, அவற்றின் அழைப்பு மணிகளைச் சட்டென உபயோகித்து விடவோ முடிவதில்லை. நாம் அழைக்கும் நேரம் அப்பிள்ளைகள் உறங்கும் நேரமாய் இருந்துவிடக் கூடாதே என்ற பதற்றம் விரல் நுனிகளுக்குள் எப்போதுமிருக்கிறது.

குழந்தைகள் கலைக்கக் கலைக்க வீடுகள் ரம்மியமாகிக் கொண்டே இருக்கின்றன. கிறுக்கல்களாலும் கீறல்களாலும் புனிதமிழக்கும் சுவர்கள், தேர்ந்த அனுபவசாலியின் முதிர்வைப் பெறுகின்றன. பொம்மைகளுக்கு நிகரான மதிப்பு கரண்டிகளுக்கும் இதர பாத்திரங்களுக்கும் வழங்கப்படுகிறது. எவர் அனுமதியுமில்லாமலேயே வண்ணங்களாலும், முதிரா இளம் வார்த்தைகளாலும் நிறையத் தொடங்குகிறது வீடு.

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும். அவர்கள் அருகிருக்கும் நேரங்களில் நான் சகல ஞானங்களும் வித்தைகளும் அறிந்த மேதையாகி விடுவேன். சில நேரங்களில் கைகளுக்கு பதிலாய் வெண்மையான பெரும் சிறகுகளோ, அமர்ந்திருக்கும் இடத்தில் தாமரையாலான உயர்ந்த பீடமோ கூட முளைத்திருக்கும். சொல்லும் கதைகள் அனைத்திலும் அவர்கள் மனதில் விதைக்கத் தகுந்த மிகச் சிறந்த நீதிகள் நிச்சயம் இருக்கும். ஆனால் சித்து அப்படியில்லை. அவரைச் சந்திக்கும் பிள்ளைகள் என்ன உயரமோ அதே அளவில் தன் உயரமும் இருக்கும்படியாய் பார்த்துக் கொள்வார். குழந்தையிடம் தன் சுட்டு விரலைக் கொடுத்து நடை பழகச் செய்வதைக் காட்டிலும், அதன் கைகளில் சிக்கி நாளெல்லாம் இழுபட்டுக் கொண்டிருக்கும் பொம்மைகளில் ஒன்றாய் இருப்பதிலேயே அவருக்கு விருப்பம் அதிகம். தமிழ் கூறு நல்லுலகம் தன் கவிதைகளில் காதலைப் பிரதிபலித்த அளவிற்கு குழந்தைமையைப் பிரதிபலிக்காது போனதில் அவருக்கு வருத்தங்கள் மிகவுண்டு.

பட்சிகள் துயிலெழாத கருக்கலில்
முடிகின்றன பயணங்கள்.
மூடுபனியில் மூழ்கிய வீட்டின் கதவுகள்
திறக்கையில்
கீச்சு மொழிபேசி எழுப்பி விடலாம்
விடிவிளக்கின் ஒளிவீச்சில்
துயிலும் என் உயிர்க்குஞ்சை.
திரள்கனவில் கடவுளோடான
வாதத்தில் எப்போதும் வெல்பவளுக்கு
தோல்வியின் உக்கிரத்தில்
அவர் விடுக்கும் சாபமே பசியாக
நிந்திக்க இயலாமல்
அலறியழுது தாய்மடி அடைவாள்.
பசி தணிய ஊசலாட்டமாய்
மாராப்பினுள்ளும் புறமும்
தலையசைத்து
அடுத்தொரு மாயவாதம்
தன் தாயோடு அவள் நிகழ்த்துகையில்
கூட்டினுள் நுழைவேன். 
அதுகாறும்
பனி தின்னட்டும் என் பாழுடலை 

தனக்கு மிகப் பிடித்த குழந்தைக் கவிதையென பாம்பாட்டிசித்தனின்,  பனிமொழி என்ற இந்தக் கவிதையை அவர் எனக்கு அறிமுகம் செய்த போது, நான் பதிலாய்க் கொடுத்த பழங்கவிதை இது.

போரும், வீரமும், யாசகக் குரல்களும், அறைகூவல்களும், அறிவுரைகளுமாய் நிரம்பி வழியும் புறநானூற்றில், புற்களிடையே பூத்த ஒற்றைப் பூவாக தலையுயர்த்தி நிற்கும் இப்பாடலை பார்க்கும் ஒவ்வொரு முறையும் பாண்டியன் அறிவுடை நம்பியை நினைத்து வியப்படையாமல் இருக்க முடிவதில்லை.

"படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே."


- புறம் 188

செல்வங்கள் பல பெற்று, தினமும் பல நூறு பேருக்கு உணவு படைத்து தானும் சேர்ந்து உண்ணும் பெருஞ்செல்வந்தர்களாய் இருந்தாலும், உண்பவர்களின் வரிசையினூடே குறுக்கும் நெடுக்குமாய் தளர் நடை நடந்து, எவர் இலையிலேனும் உள்ள உணவினைத் தன் சின்னஞ்சிறு கைகளை நீட்டித் தொட்டும், அள்ளி எடுத்தும், அன்னப் பருக்கைகள் சுற்றிலும் சிதற கைகளால் துழாவியும், நெய்யிட்டுப் பிசைந்த அவ்வுணவை வாயைத் தவிர்த்து உடம்பின் இதர பகுதிகளில் சிந்திக் கொண்டும்.. மனம் மயக்கும் பிள்ளைச் செல்வத்தைப் பெறாதோர்க்கு தாம் வாழும் நாளில் பெறக் கூடிய பேறு வேறொன்றும் இல்லை என்கிறது பாடல்.

இப்பாடலுக்கு வயது ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்கள்! கவிதையினூடே 'குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்..'  குறும்புகள் செய்யும் குழந்தைக்கும்  இவ்வரிகளில் பொங்கித் ததும்பும் குழந்தைமைக்கும் வயது ஏது?

13 கருத்துகள்:

☀நான் ஆதவன்☀ சொன்னது…

குழந்தையாகிப்போனேன்!

:)

சந்தனமுல்லை சொன்னது…

/நாம் அழைக்கும் நேரம் அப்பிள்ளைகள் உறங்கும் நேரமாய் இருந்துவிடக் கூடாதே என்ற பதற்றம் விரல் நுனிகளுக்குள் எப்போதுமிருக்கிறது./

வாவ்! பப்பு கைக்குழந்தையாக இருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன! ஊரிலிருந்து யார் வந்தாலும் அழைப்புமணி அடிக்க மாட்டார்கள். கதவை தட்டுவார்கள். அந்த மென்மையான தருணங்களை நினைத்துக்கொண்டேன்!

/குறும்புகள் செய்யும் குழந்தைக்கும் இவ்வரிகளில் பொங்கித் ததும்பும் குழந்தைமைக்கும் வயது ஏது?/

அழகா ஆரம்பிச்சு அழகா முடிச்சிருக்கீங்க! தொடர்ந்து எழுதுங்கள்!

நர்சிம் சொன்னது…

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

காயத்ரி சித்தார்த் சொன்னது…

நன்றி ஆதவன்.. :)

நன்றி முல்லை..

நர்சிம் உங்கள் பதிவுகளை ரீடரில் வாசித்து வருகிறேன். இதுவரை ஒரு முறை கூட பின்னூட்டமிட்டதேயில்லை என்ற குற்ற உணர்ச்சி முதல் முறையாய் எழுகிறது இப்போது. நன்றி வருகைக்கும் பாராட்டிற்கும். :)

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

மிகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்களா?

நல்ல ஒப்பீடு.

நன்றி,தேர்ந்த புறப்பாடலுக்கும்..

Unknown சொன்னது…

புதுக்கவிதை, புறநானூறு இரண்டுமே அழகு. அதற்கு நீங்க கொடுத்திருக்கும் முன்னுரை ரொம்ப நல்லா இருக்கு.

//குழந்தைகள் கலைக்கக் கலைக்க வீடுகள் ரம்மியமாகிக் கொண்டே இருக்கின்றன. கிறுக்கல்களாலும் கீறல்களாலும் புனிதமிழக்கும் சுவர்கள், தேர்ந்த அனுபவசாலியின் முதிர்வைப் பெறுகின்றன. பொம்மைகளுக்கு நிகரான மதிப்பு கரண்டிகளுக்கும் இதர பாத்திரங்களுக்கும் வழங்கப்படுகிறது. எவர் அனுமதியுமில்லாமலேயே வண்ணங்களாலும், முதிரா இளம் வார்த்தைகளாலும் நிறையத் தொடங்குகிறது வீடு.//

இப்போ அதை அனுபவத்தில் உணர்கிறோம். வாழ்வின் கொடுத்து வைத்த தருணங்கள்.

//குழந்தையிடம் தன் சுட்டு விரலைக் கொடுத்து நடை பழகச் செய்வதைக் காட்டிலும், அதன் கைகளில் சிக்கி நாளெல்லாம் இழுபட்டுக் கொண்டிருக்கும் பொம்மைகளில் ஒன்றாய் இருப்பதிலேயே அவருக்கு விருப்பம் அதிகம். //

சித்தார்த் இந்த வரிகளில் எனக்கு ரொம்ப நெருக்கமானவர் ஆகிட்டார்.

தொடர்ந்து அடுத்த இடுகைகளுக்குக் காத்திருக்கிறோம்.

`மழை` ஷ்ரேயா(Shreya) சொன்னது…

அழகான இன்னுமொரு பதிவு கண்டுகொண்டேன். :O)

நேசமித்ரன் சொன்னது…

எதனை நூறாயிரம் ஆண்டுகள் கடந்த போதும் குழந்தைகள்
வானவில் கடல் காதல் தீ தாய்மை மான் மயில் இன்னும் நீளும் பட்டியல் ஒன்றே அல்லவா

சொல்ல வாய்த்திருக்கிறது உங்களுக்கு
இன்றுதான் இணைப்பறிந்து வர வாய்த்தது எனக்கு

நன்றி

Unknown சொன்னது…

//குழந்தைகள் கலைக்கக் கலைக்க வீடுகள் ரம்மியமாகிக் கொண்டே இருக்கின்றன. // என்று சொல்லி விட்டு,

//கிறுக்கல்களாலும் கீறல்களாலும் புனிதமிழக்கும் சுவர்கள், தேர்ந்த அனுபவசாலியின் முதிர்வைப் பெறுகின்றன.// என்று எப்படி சொல்லலாம்? புனிதமான சுவர்கள், தாமும் குழந்தைகளாய் விளையாடத் தொடங்கி விடுகின்றன இல்லையா?

வீடு மாற்றி வரும்போது, குழந்தைமை கலந்த காற்றை விட்டு வருகிறேனே என்ற என் பரிதவிப்புப் போலவே அந்த வீட்டுக்கும் இருந்திருக்கும். நல்ல வேளை, அந்த வீட்டிலும் இப்போது குழந்தைகள் இருக்கும் குடும்பம் தானாம்.

//குழந்தையிடம் தன் சுட்டு விரலைக் கொடுத்து// அது வளர்ந்ததுக்கப்புறம் அத‌ன் பொய்க‌ளில் நாமாக தலை கொடுத்து, சிக்கிக் கொண்டு...

வாழ்த்துகள்:-)

அபி அப்பா சொன்னது…

குட் குட்! இப்பவாவது புத்தி வந்துச்சே. சட்டு புட்டுன்னு ஒரு பேரனோ பேத்தியோ பெத்துக்கோ தங்காச்சி:-))

அபி அப்பா சொன்னது…

அருமையான பதிவு காயத்ரி!

குப்பன்.யாஹூ சொன்னது…

hi nice, but hos to follow this blog

பெயரில்லா சொன்னது…

அவர்கள் அருகிருக்கும் நேரங்களில் நான் சகல ஞானங்களும் வித்தைகளும் அறிந்த மேதையாகி விடுவேன்.

அவரைச் சந்திக்கும் பிள்ளைகள் என்ன உயரமோ அதே அளவில் தன் உயரமும் இருக்கும்படியாய் பார்த்துக் கொள்வார் :))