புதன், 23 டிசம்பர், 2009

உறக்கமற்ற காத்திருப்பு - 1




குறுந்தொகையை வாசிக்க ஆரம்பித்த பொழுது அதன் வீரியம் என்னை அலைகழித்தது. எங்களை பிரித்த மிக நீண்ட காலவெளியான 2000 வருடங்கள் அதற்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. புத்தகம் ஒன்றின் பாதிப்பில் உறக்கம் கொள்ளாது தவித்த இரவில், நானும் காயத்ரியுமாய் சீறும் கடல் அலைகளின் முன்பாக நிற்கையில், மகனை பிரிந்த தாயினை திரைப்படம் ஒன்றில் காண நேர்கையில்... என எதிர்பாரா தருணங்களில் எல்லாம் என் முன் வந்து நின்றது குறுந்தொகை.

காதலர்களால் மட்டுமே காத்திருப்பை அதன் முடிவிலா வடிவில் உணர முடியும் என நான் அறிந்த நாளில், குறுந்தொகை எனக்கு மிக மிக அருகில் வந்துவிட்டிருந்தது. குறுந்தொகையை எனது அப்போதைய மனம் காத்திருப்பின் வாக்குமூலங்களின் தொகுப்பாக கண்டது. அந்த உந்துதலில் காத்திருப்பின் வலி ஏறிய குறுந்தொகை பாடல்களை தொகுத்து ”பண்புடன்” குழுமத்தில் இட்டேன். அதை தொடர் பதிவாக இங்கே இடுகிறேன்.


 நெய்தல் - தலைவி கூற்று


நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

-பதுமனார்.

நள்ளென்றன்றே யாமம் - வந்துவிட்டது இரவு.

சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் - சொற்கள் இல்லாதாகி மக்கள் இனிதாய் உறங்கிவிட்டனர்.

முனிவின்று நனந்தலை உலகமும் துஞ்சும் - கோபமோ வெறுப்போ இல்லாது நிம்மதியாக முழு உலகமும் உறங்குகிறது.

ஓர் யான் மன்ற துஞ்சாதேனே - நான் ஒருவள் மட்டும் உறங்காமல் இருக்கிறேன்.

இந்த கவிதை காத்திருப்பை பற்றித்தான் பேசுகிறது என்றே நம்புகிறேன். உலகம் முழுதும் உறங்குகையில் உறக்கம் கொள்ளாமல் தவிக்கும் ஒரு மனதின் புலம்பல் இந்த கவிதை. பெரும்பாலான குறுந்தொகை பாடல்களை போல இந்த பாடலும் மிக மிக குறைந்த புள்ளிகளை கொண்டு வரையப்பட்ட கோலமே. தகவல் என்று என்ன இருக்கிறது இந்த பாடலில்?  நீங்களெல்லாம் தூங்குகிறீர்கள்... நான் மட்டும் தூங்காதிருக்கிறேனே என்கிறாள்/ன். இப்பாடலை சுற்றி உள்ள தலைவி கூற்று, நெய்தல் திணை போன்ற மீதகவல்களை (metadata) எடுத்துவிடலாம். என்ன எஞ்சுகிறது? நாம் நம் அகம் கொண்டு கடக்கக்கூடிய ஒரு கவியனுபவம் மட்டும். அங்கிருந்து நாம் செல்லக்கூடிய தூரத்தை தீர்மானிப்பது நாமே. நாங்கள்  இக்கவிதை குறித்து பேசிக் கொண்டிருந்த போது தோன்றியவை...


* மக்கள் சொல்லவிந்தடங்கினரே என்று ஏன் சொல்ல வேண்டும்? இவளது மனதினுள் ஓயாமல் சொற்கள் பெருகியபடியே இருப்பதனால் தானோ?


* சொல்லற்ற தன்மையும், நிம்மதியான உறக்கமும் எனக்கு மட்டும் ஏன் வாய்க்கவில்லை என்ற துக்கம், அதற்கு என்ன அல்லது யார் காரணம் என்ற கேள்வி இந்த தலைவிக்கு மட்டும் உரியது தானா? நம்மில் ஒவ்வொருவரும் எதோவோர் பொழுதில் இத்துக்கத்தை உணர்ந்ததில்லையா?


* சிறிய சாளரம் வழியாக வானத்தை வேடிக்கை பார்ப்பது போல.. அவளது வாழ்க்கையை நாம் பார்க்க வாய்த்த சிறிய சன்னலே இந்த பாடல்.


* அந்த சன்னல் வழியாக  நாம் பார்க்கின்ற வாழ்க்கை ஆச்சரியகரமாக நம் வாழ்க்கையை போலவே இருக்கின்றது.. வானம் எல்லோருக்கும் ஒன்று தானே?


பேசி முடிக்கையில் முத்தாய்ப்பாய் ஒன்று தோன்றிற்று. கவிதையை வாசித்தல் என்பது அக்கவிதையின் பல்வேறு வகையான சாத்தியங்களை கண்டடையும் முயற்சி தானேயன்றி முழுமையான புரிதல் எவருக்கும் சாத்தியமில்லை.. படைப்பாளிக்கும் கூட.


9 கருத்துகள்:

Unknown சொன்னது…

அணிலாடு முன்றில் மிகவும் சிறப்பாக வளர்ந்து புகழடைய வாழ்த்துகள்.

Iyappan Krishnan சொன்னது…

அருமை அருமை. :)

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னக் கண்டு

இந்தப் பாட்டு நினைவுக்கு வந்துட்டது

☀நான் ஆதவன்☀ சொன்னது…

//கவிதையை வாசித்தல் என்பது அக்கவிதையின் பல்வேறு வகையான சாத்தியங்களை கண்டடையும் முயற்சி தானேயன்றி முழுமையான புரிதல் எவருக்கும் சாத்தியமில்லை.. படைப்பாளிக்கும் கூட.//

உண்மைதான் :)

சந்தனமுல்லை சொன்னது…

ரொம்ப நல்லாருக்குங்க..பொதுவா சங்ககால பாடல்கள்னா ஓடிடுவேன்...இந்த இடுகையின் சுவாரசியம் வாசிக்க வைத்தது!

Unknown சொன்னது…

// கவிதையை வாசித்தல் என்பது அக்கவிதையின் பல்வேறு வகையான சாத்தியங்களை கண்டடையும் முயற்சி தானேயன்றி முழுமையான புரிதல் எவருக்கும் சாத்தியமில்லை.. படைப்பாளிக்கும் கூட.//

அருமையா சொல்லி இருக்கிங்க. முன்னுரையும் குறுந்தொகை விளக்கமும் அழகு.

பெயரில்லா சொன்னது…

குறுந்தொகையை எனது அப்போதைய மனம் காத்திருப்பின் வாக்குமூலங்களின் தொகுப்பாக கண்டது.|| padikkanum

பெயரில்லா சொன்னது…

நாம் நம் அகம் கொண்டு கடக்கக்கூடிய ஒரு கவியனுபவம் மட்டும். அங்கிருந்து நாம் செல்லக்கூடிய தூரத்தை தீர்மானிப்பது நாமே.||nice

பெயரில்லா சொன்னது…

கவிதையை வாசித்தல் என்பது அக்கவிதை யின் பல்வேறு வகையான சாத்தியங்களை கண்டடையும் முயற்சி தானேயன்றி முழுமையான புரிதல் எவருக்கும் சாத்தியமில்லை.. படைப்பாளிக்கும் கூட.||mm

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வலைச்சரத்தில் (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_6.html) குறிப்பிட்டது போல் அழகாகவே விளக்கியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...