திங்கள், 22 மார்ச், 2010

கூடடையும் தருணம்காதலின் எல்லா சாத்தியங்களையும் பாடுபொருளாக்கிக் கொண்டிருக்கும் சங்க இலக்கியக் கவிதைகள் வாசிக்குந்தோறும் வியப்பிலாழ்த்துகின்றன.  நவீன யுகக் கவிதைகள் தொட்டும் கூடப் பார்த்திராத மனதின் நுண்ணிய ஊற்றுக் கண்களை வெகு எளிதாய்ப் பீறிட்டெழச் செய்யும் இக்கவிதைகளின் இயல்பை என்னவென்று சொல்ல? தமிழின் நீண்ட நெடும் பயணத்தில், வழி நெடுகையிலும் தவறி விழுந்து விட்ட சொற்களின் தொகுப்புகளாய் காட்சியளிப்பதைத் தவிர்த்து இவற்றின் பிழை வேறொன்றுமில்லை என்றே தோன்றுகிறது. 

இன்று சராசரியாய் நாளொன்றுக்கு  எழுதப்படும் ஆயிரத்து சொச்சம் சமகால காதல் கவிதைகளில், காதலுக்காக, காதலிக்காக உருகி மறுகும் கவிதைகள் எதுவும் ஏன் மனைவியைப் பற்றியோ இனிய குடும்பத்தைப் பற்றியோ  பேசுவதில்லை? பணி நிமித்தம் மனைவியைக் குழந்தைகளைப் பிரிந்து வெகு தொலைவில் வாழ்பவர்கள், அவர்கள் வரவிற்காக காத்திருக்கும் மனைவியர்கள் இவர்களைப் பற்றிய அவதானிப்புகள் ஏதும் தற்கால கவிதைகளில் இருக்கிறதா என்ன? 

"ஒருநாள் எழுநாள் போற்செல்லும் சேட்சென்றார்
வருநாள் வைத்தேங்கு பவர்க்கு"

என்ற குறளின் முழு அடர்த்தியும் விரிவும் தனித்து இங்கு வசிக்கும் காலங்களில் மட்டுமே முழுதாய்ப் புலப்படுகிறதெனக்கு.

இன்றைய வாசிப்பில் மிகவும் ஆச்சரியப்படுத்திய அகநானூற்றுக் கவிதை இது. உணர்ச்சிகளையும், அவை பொங்கித் ததும்பும் தருணங்களையும் மிகத் துல்லியமாய் வார்த்தைகளில் நகலெடுக்கும் இக்கரத்தை கண்களில் ஒற்றிக் கொண்டாலென்ன?

"கொல்லினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச்
செப்படர் அன்ன செங்குழை அகந்தோறு
இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய்
உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாரித்
துப்பின் அன்ன செங்கோட்டு இயவின் 
நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும்


அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்க் 
கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடுமாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி உரந்துரந்து
ஞாயிறுபடினும் ஊர் சேய்த்து எனாது
துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின் 


எம்மினும் விரைந்துவல் ஏய்திப் பன்மாண்
ஓங்கிய நல் இல் ஒருசிறை நிலைஇ
பாங்கர்ப் பல்லி படுதோறும் பரவி
கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி


கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகி
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பில்லாள் நுதல்
அந்தீங் கிளவிக் குறுமகள்
மென் தோள் பெறநசைஇச் சென்ற என் நெஞ்சே"

- கல்லாடனார் 

வாசிப்பின் போது குறுந்தொகையும், ஐங்குறுநூறும் தோற்றுவிக்காத சிரமங்கள் சில அகநானூற்றில் உண்டு. அடி விரிவும் மிக நீண்ட வர்ணனைகளும் சில நேரங்களில் சலிப்பேற்படுத்துவதுண்டு. இதை மனதில் வைத்தே அடிகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறேன். 

தொலைத்தொடர்பு வசதிகள் ஏதும் தோன்றியிராத காலத்தில், மனைவியை பணி நிமித்தமாக வெகுநாட்கள் பிரிந்திருந்த கணவன் பணி முடிந்து தனது தேரில் ஊர் திரும்புகையில் தனக்குத் தானே சொல்லிக் கொள்வதாய் விரிகிறது இந்தக் கவிதை. பாடலின் முதல் பத்தி, அவன் வரும் வழியில் மலர்ந்திருக்கும் பூக்களையும், இரண்டாம் பத்தி கடக்கும் சிற்றூரையும் மலைகளையும் விவரிக்கிறது. மூன்று மற்றும் நான்காம் பத்திகள் அவன் வரவிற்காக காத்திருக்கும் அவன் மனைவியையும் அவள் மீதான அவனது அன்பினையும் விவரிக்கிறது. 

இப்பாடலில் சொல்லப்படும் இருப்பை மரம் எதுவென்று தெரியவில்லை. செப்புத் தகடு போல சிவந்த தளிர்களையும், நெய்யை ஒத்த தேனுடன் விளங்கும் பூக்களையும் கொண்ட மரம் என்று சொல்லப்படுகிறது. அப்பூக்கள், வீசும் காற்றில் சிதறி ஆலங்கட்டி மழை போல, சிவந்த பாறைகளின் மீது உதிர்ந்து கிடக்கின்றது என்பதாக அவன் வரும் வழி காட்சிப்படுத்தப்படுகிறது.

அத்தகைய மரங்கள் நிறைந்த சிற்றூரில் பெண்கள் உலக்கை கொண்டு உரலில் குத்தும் போது எழும் ஓசையும் மலைகளில் வாழும் ஆந்தைகள் எழுப்பும் ஓசையும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆந்தைகளின் குரல் ஒலிக்கத் தொடங்குவதால் பகல் மறைந்து இரவு தொடங்கும் நேரம். அத்தகைய ஊர்களையும் குன்றுகளையும் விரைவாக பின்னுக்குத் தள்ளியபடி அவன் தேர் விரைந்து கொண்டிருக்கிறது. 

"ஞாயிறுபடினும் ஊர்சேய்த்து எனாது
துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்
எம்மினும் விரைந்துவல் எய்திப்…"

சூரியன் மறைந்து விட்ட போதும், ஊர் வெகு தொலைவிலிருக்கிறதே என்று அஞ்சாமல், உறக்கத்தை உதறி குதிரைகளை விரைந்து செலுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் நெஞ்சம் என்னை விடவும் விரைவாக முன்னே செல்கிறது.

"…………. பன்மாண்
ஓங்கிய நல் இல் ஒருசிறை நிலைஇ
பாங்கர்ப் பல்லி படுதோறும் பரவி
கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி"

சென்று, பல வகைச் சிறப்புக்களுடன் ஓங்கி உயர்ந்து விளங்கும் நல்ல வீடு ஒன்றின் ஒரு பக்கத்தில் நின்று, பல்லிகளின் குரல் ஒலிக்கும் போதெல்லாம் நான் வரும் நாள் குறித்த சகுனத்தை அது சொல்வதாக எண்ணிக் கொண்டு, கன்றுகள் வீடு திரும்புகின்ற மாலையில் தனித்து நிற்பவளை அடைந்து…

''கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகி
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ''

பின்னாலிருந்து குவிந்த கரங்களால் அவள் கண்களைப் பொத்தியும், நீண்ட அவள் கூந்தல் படர்ந்திருக்கும் பின்னகத்தைத் தீண்டியும், அவளை அணைத்தபடி, வளையல்கள் அணிந்த கரங்களோடு தன் கரங்களைப் பிணைத்துக் கொண்டு தழுவவும் தொடங்கி விட்டது,


"நாணொடு மிடைந்த கற்பில்லாள் நுதல்
அந்தீங் கிளவிக் குறுமகள்
மென் தோள் பெறநசைஇச் சென்ற என் நெஞ்சே"


நாணமும் கற்பும் மிகுந்த, அழகிய நெற்றியையும், இனிய குரலையும் உடைய இளையவளான என் மனைவியின் மெல்லிய தோள்களைப் பெற விரும்பிய என் நெஞ்சு என்கிறான். 

இதற்கு மேலும் இதை விரித்து விரித்து நீர்க்கச் செய்ய மனமில்லை எனக்கு. கவிதையின் ஆன்மாவை உணர்ந்து கொண்டவர்கள் எவரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 

16 கருத்துகள்:

Iyappan Krishnan சொன்னது…

அருமை அருமை :)

Rajan சொன்னது…

அணிலாடு முன்றில் ! நல்லா இருக்கு ! நடத்துங்க ,,,, அப்பப்ப வந்து பாக்கறேன்

ச.முத்துவேல் சொன்னது…

மிக நன்றாகவே உணர முடிகிறது. இட்டிருக்கும் புகைப்படமும் வலு சேர்க்கிறது.

Thirumal சொன்னது…

//இதற்கு மேலும் இதை விரித்து விரித்து நீர்க்கச் செய்ய மனமில்லை எனக்கு. //


கருணைக்கு நன்றி :-)))

குசும்பன் சொன்னது…

//கவிதையின் ஆன்மாவை உணர்ந்து கொண்டவர்கள் எவரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.//

கவிதையின் ஆன்மாவை மட்டும் இல்லை அதன் உயிர், நாடி துடிப்பு,இதயத்துடிப்பு, சுவாசம் அனைத்தையும் உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், உங்கள் விளக்கம் மிகவும் அருமை.

Naresh Kumar சொன்னது…

அருமையான பதிவு!!!

சந்தனமுல்லை சொன்னது…

சுவாரசியமா, ஆச்சரியமா இருக்குங்க இடுகை...

/காதல் கவிதைகளில், காதலுக்காக, காதலிக்காக உருகி மறுகும் கவிதைகள் எதுவும் ஏன் மனைவியைப் பற்றியோ இனிய குடும்பத்தைப் பற்றியோ பேசுவதில்லை?/

இந்தக் கேள்வி முக்கியமாக படுகிறது..

ராம்ஜி_யாஹூ சொன்னது…

மனைவி பற்றி கவிதை இல்லை என்று சொல்லி விட்டீர்களா ,

வடுகப்பட்டி காரன் கவிதை மறந்து விட்டீர்களா.

தென்றல் என்ன தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்

பூ வளர்த்த தோட்டமே
கூந்தல் இல்லை தீர்ந்து போ
பாவை இல்லை பாவை
தேவை என்ன தேவை.

பெயரில்லா சொன்னது…

:-)

chandru / RVC சொன்னது…

//ஞாயிறுபடினும் ஊர்சேய்த்து எனாது
துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்
எம்மினும் விரைந்துவல் எய்தி//
//கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகி பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ//

கல்லாடனாரின் பாடலுக்கு
நீர்த்துப்போன சொற்களால் பின்னூட்டமிட்டு என்ன சொல்லப் போகிறேன்?

நர்சிம் சொன்னது…

//எழுதப்படும் ஆயிரத்து சொச்சம் சமகால காதல் கவிதைகளில், காதலுக்காக, காதலிக்காக உருகி மறுகும் கவிதைகள் எதுவும் ஏன் மனைவியைப் பற்றியோ இனிய குடும்பத்தைப் பற்றியோ பேசுவதில்லை? பணி நிமித்தம் மனைவியைக் குழந்தைகளைப் பிரிந்து வெகு தொலைவில் வாழ்பவர்கள், அவர்கள் வரவிற்காக காத்திருக்கும் மனைவியர்கள் இவர்களைப் பற்றிய அவதானிப்புகள் ஏதும் தற்கால கவிதைகளில் இருக்கிறதா என்ன//

அப்படியா? ;)

அந்தக் குறள் மிக அடர்த்தியானது.

நல்ல பகிர்விற்கு நன்றிங்க.

ஆடுமாடு சொன்னது…

கல்லூரி காலத்தில் வாசித்து மறந்ததுதான்.

தெளிவான விளக்கம். நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

{என்றோ எவரோ எழுதி வைத்த ஓவியத்தில் நம் முகம் இருப்பது எத்தனை ஆச்சரியகரமானது! எவருடைய சுயசரிதையிலோ நம் வாழ்க்கை இருப்பதைப் போல.. வாசிக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் இவ்விலக்கியங்கள் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும் பெருவியப்பினை, எக்காலத்தும் மனித உணர்வுகளோடு மிகவியல்பாய் அவை உருவாக்கிக் கொள்ளும் அளப்பரிய நெருக்கத்தினை}

காயத்ரி,

கவிதையின் ஆன்மாவை உணர்தல் இந்த வார்த்தைகளில் இருக்கிறது !

:))

BWT அந்தப்பதிவில் இருக்கும் பல பின்னூட்டங்கள் படிக்க இயலாத குறிகளில் இருக்கின்றன;என்னவோ டெக்னிகல் பிரச்னை,பார்க்கவும்..

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

உங்களுக்கு ஒரு அழைப்பு இருக்கு என் பதிவுல..
மறக்காம,மறுக்காம எழுதுங்க..

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

காயத்ரி,
உங்களுக்கு ஒரு அழைப்பு என் பதிவில் இருக்கிறது...
மறக்காமல் மறுக்காமல் எழுதுங்கள்..

சுட்டி இங்கே..

நன்னி.

பெயரில்லா சொன்னது…

மனதின் நுண்ணிய ஊற்றுக் கண்களை வெகு எளிதாய்ப் பீறிட்டெழச் செய்யும் இக்கவிதைகளின் இயல்பை என்னவென்று சொல்ல? || mm