திங்கள், 25 ஜனவரி, 2010

ஊடற்பொழுதுகள்
குறுந்தொகையில் தலைவன்கள் - தலைவிகளுக்கிடையிலான ஊடற்பொழுதுகளைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன். அத்தனையும் கவித்துவமிக்க உணர்ச்சித் தெறிப்புகள். ஒவ்வொன்றையும் தனித்தனியே நேருக்கு நேர் கண் கொண்டு பார்க்கையில் திடுமென காலமின்மை கைகூடி விடுவது ஓர் உன்னத அனுபவம். உண்மையில் இலக்கிய அனுபவம் என்பது இதுவாகத்தான் இருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றேயாகி அந்த ஒன்றும் தானேயாகும் தருணங்களில் வாய்க்கும் அற்புத அனுபவம் அது.

இன்றைய வாசிப்பில், ஓர் விசித்திர சிந்தனை எழுந்தது.  இந்நூலில் தலைவி கூற்றென வரும் அத்தனை பாடல்களும் ஏன் ஒரே ஒரு தலைவியின் உணர்வெழுச்சிகளாக இருக்கக் கூடாது? பெண் மனம் இத்தனை கொந்தளிப்புகளுக்கும் ஆட்படக் கூடியது தானில்லையா? அளவிறந்த காதலும், அதன்பாற்பட்ட எதிர்பார்ப்புகளும், அவை நிறைவேறாத ஏமாற்றமும், அது தரும் கோபங்களும், கோபத்தின் எல்லையில் பிரிவும், பிரிவின் நீட்சியில் மீண்டும் பொங்கிப் பெருகும் பிரியங்களும் என காலம் காலமாய் காதலில் பெண் மனம் சுழன்று வரும் பாதை இதுவாகத் தான் இருந்து வருகிறது போலும்.

குறுந்தொகையின் இருவேறு பாடல்கள் இப்பாதையைத் துல்லியமாய்ச் செதுக்குகின்றன.  ஒன்று ஏமாற்றத்தின் விளைவாய் எழும் சீற்றம்..

உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
திருப்பின்எம் அளவைத் தன்றே வருத்தி
வான்தோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.

-ஔவையார். (குறு. 102)

அவரை நினைத்தால் உள்ளம் வேகின்றது. நினைக்காதிருப்பதும் என்னால் தாங்கக் கூடியதாய் இல்லை. என்னை வருத்தி வானில் தோயுமளவிற்கு வளர்ந்து நிற்கிறது காமம். நான் விரும்பியவர் சிறந்தவர் அல்ல.

வெறும் நான்கு வரிகளில் இத்தனை கோபத்தை, வெறுப்பை, ஆற்றாமையை, தன் துயரத்தின் முழுமையை சொல்லி விட முடிவது என்னை மீண்டும் மீண்டும் மீளா வியப்பிலாழ்த்துகிறது. தான் நேசிப்பவன் சிறந்தவனல்ல என்ற முடிவிற்கு வந்துவிட்ட பிறகும் நினைக்கவும் முடியாமல் நினையாதிருக்கவும் முடியாமல் அவள் தவிப்பது எதனால்?  இத்தனை துயரம் நிரம்பியிருந்தும் இது ஓர் பெண்ணின் மன முறிவைச் சொல்லும் சோகப் பாடலாக ஏன் தோன்றவில்லை? எந்நேரமும்  பற்றி எரியக் கூடிய வீரியமிக்க தணல்களாக, அவை வெளியிடும் வெப்பப் பெருமூச்சாக காட்சியளிக்கும் இவ்வரிகளிலும் கூட, அவள் காதலை பிரிவாற்றாமையின் வடிவில் அடையாளம் கண்டுகொள்ள முடிவதால் தானா?

ஒவ்வொரு ஊடலின் போதும் அதன் ரகசிய அடுக்குகளிலிருந்தே கூடலுக்கான காத்திருப்பும் கசியத் தொடங்கி விடுகிறது. கோபத்தின் தகிப்பிலும் அதை அணைக்கும் கரங்களுக்கான ஏக்கத்திலும் அக்காத்திருப்பு உக்கிரமடைகையில் அது தன்னிரக்கமாகவும், வெறுப்பாகவும், சில நேரங்களில் காலத்தால் அழியாத கவிதையாகவும் உருப்பெற்று விடும் போல!

இவ்வுணர்வெழுச்சியின் அபாரமான மறு நுனியாக விளங்குகிறது மற்றோர் பாடல்..

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.

-அள்ளூர் நன்முல்லையார். (குறு.93)

என்னுடைய அழகு தொலைந்து, உடல் நலம் மிகவிழந்து என்னுடைய உயிர் இவ்வுடலை விட்டு நீங்கினாலும் சரி.. அவரைப் பற்றி தவறாகப் பேசாதே. அவர் நமக்கு அன்னையையும் தந்தையையும் போன்றவர் அல்லவா தோழி? அன்பில்லாதவிடத்தில்  ஊடல் எப்படி தோன்றும்?

இப்பாடலைப் படிக்கும் போதெல்லாம் மெய்சிலிர்த்துக் கொள்கிறேன்! என்னவொரு உணர்ச்சிப் பிழம்பான சித்திரம் இது! இப்பாடலின் பின்புலம் என்னவாக இருக்கும்? கணவன்/காதலன் என்ன காரணத்தாலோ கோபித்துச் சென்றிருக்கிறான். சென்றவன் வெகுநாட்களாய் திரும்பவுமில்லை. இனித் திரும்புவானா என்ற நிச்சயமின்மையின் விளிம்பில் நின்றபடி அவனை சந்தேகித்துப் பேசுகிறாள் தோழி. அத்தோழிக்கு இவள் தரும் ஆணித்தரமான பதில் இது.

தன் நலங்கள் தொலைந்தாலும் தானே இறக்க நேரிட்டாலும் அப்போதும் அவனைக் கடிந்து கொள்ள விரும்பாத, அவனை காதலனாக மட்டுமின்றி தாயுமானவனாகவும் எண்ணி மனம் குழைகின்ற பேரன்பையும்,  'புலவி அஃதெவனோ அன்பிலங்கடையே?' என்ற வரியில் ஊற்றெடுத்துப் பெருகும் அதீத நம்பிக்கையையும் என்னவென்று வரையறுப்பது?  அன்பில்லாவிட்டால் ஊடல் எங்கிருந்து தோன்றும்? அவனது கோபம் தன் மேலான நேசத்தின் மீதும் உரிமையின் மீதும் வரையப்படும் நீர்க்கோலம் என்பதை அவள் எப்போதும் அறிந்தே வைத்திருக்கிறாள் என்ற உண்மையை மிக அழகாய் புலப்படுத்துகிறது இக்கேள்வி. கவிதையோ, பூரண நிலவைப் போல, பொங்கித் ததும்பும் நிறைகுடம் போல ஒரு முழுமையை உணரும் அனுபவத்தைத் தந்து வாசிக்குந்தோறும் மனதை நிறைக்கிறது.

13 கருத்துகள்:

நிலாரசிகன் சொன்னது…

நல்லா இருக்கு :) எழுத்தும்,அதற்கேற்ற படத்தேர்வும்.

கானா பிரபா சொன்னது…

ரசித்தேன்

இப்படி மாறி மாறி நீங்க இரண்டு பேரும் சங்கம் வச்சு தமிழ் வளர்க்கும் பணி சிறக்கட்டும் ;)

நேசமித்ரன் சொன்னது…

தாங்கள் தேர்ந்திருக்கும் இரண்டு பாடல்களுக்கான அடிநாதம்
அதீதமான அன்பு அந்த அன்பை உணர்ந்து இந்த நாலு வரிகள் குறுகத்தரித்திருப்பதை பார்கையில்

நாம் எல்லாம் என்ன எழுதி என்று தோன்றுகிறது ஒரு கணம்
:)

சந்தனமுல்லை சொன்னது…

ஸ்கூல்லே சங்க பாடல், தலைவன் தலைவின்னா தலை தெறிக்க ஓடிடுவேன்...முழுமூச்சா படிக்க வச்சிட்டீங்க காயத்ரி! உங்க ப்ரண்டேஷனும் காரணம்! :-)

காயத்ரி சித்தார்த் சொன்னது…

நிலா, கானா பிரபா.. நன்றி!

காயத்ரி சித்தார்த் சொன்னது…

//அதீதமான அன்பு அந்த அன்பை உணர்ந்து இந்த நாலு வரிகள் குறுகத்தரித்திருப்பதை பார்கையில் நாம் எல்லாம் என்ன எழுதி என்று தோன்றுகிறது ஒரு கணம்.//

உண்மை.. இந்த சொற்சிக்கனமும் தேர்வும் எப்படி இத்தனை எளிதாக கை வருகிறது என்று வியக்காமல் இருக்க முடிவதில்லை. நன்றி நேசமித்ரன்.

காயத்ரி சித்தார்த் சொன்னது…

//முழுமூச்சா படிக்க வச்சிட்டீங்க காயத்ரி! உங்க ப்ரண்டேஷனும் காரணம்!//

நிஜம் தானா? கொஞ்ச நாளா இந்தப் பக்கம் காணோம்னதும் இப்பவும் அப்டி தான் ஓடிட்டிங்களோன்னு நினைச்சேன். நன்றி முல்லை. :)

☀நான் ஆதவன்☀ சொன்னது…

ஒவ்வொரு பாடல்களுக்கும் உங்கள் எழுத்துக்கள் சுவாரஸியம் குறையாமல் எடுத்து செல்கிறது.

பெயரில்லா சொன்னது…

குறுந்தொகை புரியாவிட்டாலும் உங்கள் விளக்கம் அந்த வரிகளையும் இரசிக்க வைக்க உதவுகிறது :-)

யாழினி சொன்னது…

ரசித்தேன்..

அப்பாதுரை சொன்னது…

தவறவிட்ட வலைப்பூ.

பெயரில்லா சொன்னது…

தன் நலங்கள் தொலைந்தாலும் தானே இறக்க நேரிட்டாலும் அப்போதும் அவனைக் கடிந்து கொள்ள விரும்பாத, அவனை காதலனாக மட்டுமின்றி தாயுமானவனாகவும் எண்ணி மனம் குழைகின்ற பேரன்பையும், 'புலவி அஃதெவனோ அன்பிலங்கடையே?' என்ற வரியில் ஊற்றெடுத்துப் பெருகும் அதீத நம்பிக்கையையும் என்னவென்று வரையறுப்பது? ||

arumai.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

எப்படி இதனை தவற விட்டேன் நான்?