திங்கள், 25 ஜனவரி, 2010

ஊடற்பொழுதுகள்
குறுந்தொகையில் தலைவன்கள் - தலைவிகளுக்கிடையிலான ஊடற்பொழுதுகளைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன். அத்தனையும் கவித்துவமிக்க உணர்ச்சித் தெறிப்புகள். ஒவ்வொன்றையும் தனித்தனியே நேருக்கு நேர் கண் கொண்டு பார்க்கையில் திடுமென காலமின்மை கைகூடி விடுவது ஓர் உன்னத அனுபவம். உண்மையில் இலக்கிய அனுபவம் என்பது இதுவாகத்தான் இருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றேயாகி அந்த ஒன்றும் தானேயாகும் தருணங்களில் வாய்க்கும் அற்புத அனுபவம் அது.

இன்றைய வாசிப்பில், ஓர் விசித்திர சிந்தனை எழுந்தது.  இந்நூலில் தலைவி கூற்றென வரும் அத்தனை பாடல்களும் ஏன் ஒரே ஒரு தலைவியின் உணர்வெழுச்சிகளாக இருக்கக் கூடாது? பெண் மனம் இத்தனை கொந்தளிப்புகளுக்கும் ஆட்படக் கூடியது தானில்லையா? அளவிறந்த காதலும், அதன்பாற்பட்ட எதிர்பார்ப்புகளும், அவை நிறைவேறாத ஏமாற்றமும், அது தரும் கோபங்களும், கோபத்தின் எல்லையில் பிரிவும், பிரிவின் நீட்சியில் மீண்டும் பொங்கிப் பெருகும் பிரியங்களும் என காலம் காலமாய் காதலில் பெண் மனம் சுழன்று வரும் பாதை இதுவாகத் தான் இருந்து வருகிறது போலும்.

குறுந்தொகையின் இருவேறு பாடல்கள் இப்பாதையைத் துல்லியமாய்ச் செதுக்குகின்றன.  ஒன்று ஏமாற்றத்தின் விளைவாய் எழும் சீற்றம்..

உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
திருப்பின்எம் அளவைத் தன்றே வருத்தி
வான்தோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.

-ஔவையார். (குறு. 102)

அவரை நினைத்தால் உள்ளம் வேகின்றது. நினைக்காதிருப்பதும் என்னால் தாங்கக் கூடியதாய் இல்லை. என்னை வருத்தி வானில் தோயுமளவிற்கு வளர்ந்து நிற்கிறது காமம். நான் விரும்பியவர் சிறந்தவர் அல்ல.

வெறும் நான்கு வரிகளில் இத்தனை கோபத்தை, வெறுப்பை, ஆற்றாமையை, தன் துயரத்தின் முழுமையை சொல்லி விட முடிவது என்னை மீண்டும் மீண்டும் மீளா வியப்பிலாழ்த்துகிறது. தான் நேசிப்பவன் சிறந்தவனல்ல என்ற முடிவிற்கு வந்துவிட்ட பிறகும் நினைக்கவும் முடியாமல் நினையாதிருக்கவும் முடியாமல் அவள் தவிப்பது எதனால்?  இத்தனை துயரம் நிரம்பியிருந்தும் இது ஓர் பெண்ணின் மன முறிவைச் சொல்லும் சோகப் பாடலாக ஏன் தோன்றவில்லை? எந்நேரமும்  பற்றி எரியக் கூடிய வீரியமிக்க தணல்களாக, அவை வெளியிடும் வெப்பப் பெருமூச்சாக காட்சியளிக்கும் இவ்வரிகளிலும் கூட, அவள் காதலை பிரிவாற்றாமையின் வடிவில் அடையாளம் கண்டுகொள்ள முடிவதால் தானா?

ஒவ்வொரு ஊடலின் போதும் அதன் ரகசிய அடுக்குகளிலிருந்தே கூடலுக்கான காத்திருப்பும் கசியத் தொடங்கி விடுகிறது. கோபத்தின் தகிப்பிலும் அதை அணைக்கும் கரங்களுக்கான ஏக்கத்திலும் அக்காத்திருப்பு உக்கிரமடைகையில் அது தன்னிரக்கமாகவும், வெறுப்பாகவும், சில நேரங்களில் காலத்தால் அழியாத கவிதையாகவும் உருப்பெற்று விடும் போல!

இவ்வுணர்வெழுச்சியின் அபாரமான மறு நுனியாக விளங்குகிறது மற்றோர் பாடல்..

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.

-அள்ளூர் நன்முல்லையார். (குறு.93)

என்னுடைய அழகு தொலைந்து, உடல் நலம் மிகவிழந்து என்னுடைய உயிர் இவ்வுடலை விட்டு நீங்கினாலும் சரி.. அவரைப் பற்றி தவறாகப் பேசாதே. அவர் நமக்கு அன்னையையும் தந்தையையும் போன்றவர் அல்லவா தோழி? அன்பில்லாதவிடத்தில்  ஊடல் எப்படி தோன்றும்?

இப்பாடலைப் படிக்கும் போதெல்லாம் மெய்சிலிர்த்துக் கொள்கிறேன்! என்னவொரு உணர்ச்சிப் பிழம்பான சித்திரம் இது! இப்பாடலின் பின்புலம் என்னவாக இருக்கும்? கணவன்/காதலன் என்ன காரணத்தாலோ கோபித்துச் சென்றிருக்கிறான். சென்றவன் வெகுநாட்களாய் திரும்பவுமில்லை. இனித் திரும்புவானா என்ற நிச்சயமின்மையின் விளிம்பில் நின்றபடி அவனை சந்தேகித்துப் பேசுகிறாள் தோழி. அத்தோழிக்கு இவள் தரும் ஆணித்தரமான பதில் இது.

தன் நலங்கள் தொலைந்தாலும் தானே இறக்க நேரிட்டாலும் அப்போதும் அவனைக் கடிந்து கொள்ள விரும்பாத, அவனை காதலனாக மட்டுமின்றி தாயுமானவனாகவும் எண்ணி மனம் குழைகின்ற பேரன்பையும்,  'புலவி அஃதெவனோ அன்பிலங்கடையே?' என்ற வரியில் ஊற்றெடுத்துப் பெருகும் அதீத நம்பிக்கையையும் என்னவென்று வரையறுப்பது?  அன்பில்லாவிட்டால் ஊடல் எங்கிருந்து தோன்றும்? அவனது கோபம் தன் மேலான நேசத்தின் மீதும் உரிமையின் மீதும் வரையப்படும் நீர்க்கோலம் என்பதை அவள் எப்போதும் அறிந்தே வைத்திருக்கிறாள் என்ற உண்மையை மிக அழகாய் புலப்படுத்துகிறது இக்கேள்வி. கவிதையோ, பூரண நிலவைப் போல, பொங்கித் ததும்பும் நிறைகுடம் போல ஒரு முழுமையை உணரும் அனுபவத்தைத் தந்து வாசிக்குந்தோறும் மனதை நிறைக்கிறது.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

கலாப்ரியாவும் மிளைபெருங்கந்தனாரும்

கலாப்ரியாவின் “வனம் புகுதல்” என்ற கவிதைத் தொகுப்பில் இரு கவிதைகள். “தெரு விளக்கு”, “வீதி விளக்குகள்” என்ற அந்த இரு கவிதைகளிலும்,

“திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீஸோ
கல்லா மண்ணாவோ”


என தொடங்கி தொடரும் 10 வரிகள் பொதுவாய் வரும். அதைச்சுற்றி எழுப்பப்பட்ட மற்ற வரிகளின் மூலம் அவ்விரு கவிதைகளும் தத்தம் தனித்தன்மையினை அடையும்.

தெரு விளக்கு

திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென நிறுத்திவிட்டு
தன்னிலும் சிறுசுகளை
பயமுறுத்தி…
தடைப்பட்ட மின்சாரம்
மீண்டும் பளீரென வரும் போது
தன்னிச்சையாய்க்
கைதட்டி பிள்ளைகள்
கும்மாளமாய் கூக்குரலிடும்
ஜாடைகளற்ற
சந்தோச மொழி வழியே
எந்த மாநிலத்தை
பிரிக்கப்போகிறார்.
***
வீதி விளக்குகள்
அருகே வரும் வரை
பின்னாலிருந்தது
தாண்டும் வரை
காலடியில்
தள்ளிப்போக தள்ளிப்போக
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புவனின் நிழல்
திடீரென அணைந்த பொழுது
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென விளையாட்டை
நிறுத்திவிட்டு
ஒன்றுக்கொன்று பயமுறுத்தி
தடைப்பட்ட மின்சாரம்
பளீரென மீளும் போது
தன்னிச்சையாய்க் கை தட்டி
கூக்குரல் எழுப்பும்
குழந்தைகளின்
ஜாடைகளற்ற
சந்தோச வெளிச்சம்
காணமலாக்கும்
கவலையின் நிழல்களை

இந்த கவிதைகளை முதல் முறை வாசித்த போது என்னை ஈர்த்தது இந்த “பொதுவாய் சில வரிகள்” அம்சம் தான். படித்த போது கவிதை மட்டுமே தரக்கூடிய குறுகுறுப்பை தந்த கவிதைகள் இவை. ஆனால் வடிவத்தையும் தாண்டி தனித்தனியாகவும் மிகச்சிறந்த கவிதைகள். முதல் கவிதையில் கவிஞனின் பார்வை குழந்தைகளின் விளையாட்டின் மீது குவிகிறது. இரண்டாவது கவிதை அந்த ஆட்டம் நிகழும் போது அவ்வழியே கவலை தோய்ந்த முகத்துடன் கடந்து போகும் மனிதனின் மீது. ஒரு வகையில், முதல் கவிதையின் நீட்சியாக இரண்டாம் கவிதை விரிகிறது.

குறுந்தொகையில் மிளைப்பெருங் கந்தனார் எழுதிய இரு கவிதைகளில் இது போன்ற ஓர் வடிவத்தை காண முடிந்தது.

“காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே”

என்ற இரு வரிகள் பொதுவாய் கொண்ட கவிதைகள் அவை. இரு கவிதைகளும் காமத்தின் இரு வேறு அம்சங்களைப் பற்றி பேசுகின்றன. மிளைப்பெருந்தனாரையும் கலாப்ரியாவையும் அருகருகில் நிறுத்திப்பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

அணங்கு என்றால் சோகம் என்று பொருள். என்னை மிகவும் பாதித்த குறுந்தொகை வரி ஒன்று உண்டு. “யார் அணங்குற்றனை கடலே” என்று கடலை நோக்கி கேட்பாள் தலைவி. இதற்கு என்ன பொருள்? யாருக்காக சோகப்பட்டாய் என்பது தானே அந்த வரிக்கான பொருள்? ஆனால் அணங்கு என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் உண்டு என்று பின்னர் அறிந்தேன். சன்னதம் கொண்டு ஆடுதல், பேய்ப்பிடித்து ஆடுதல். இப்பொழுது அந்த “யார் அணங்குற்றனை கடலே” வரியின் பொருள் என்ன? “யாருக்காக வெறிபிடித்து ஆடுகிறாய் கடலே? “ அல்லது “யார் காரணமாக வெறி பிடித்து ஆடுகிறாய் கடலே?”. கடலின் கொந்தளிப்பின் முன் நின்று நான் இந்த வரியை உச்சரித்திருக்கிறேன். இன்று இந்த வரியை கற்பனாவாத வரி என்று ஒரு விமர்சகன் நிராகரிக்கலாம். ஆனால் அந்த வரியுள் புதைந்திருக்கும் எழுச்சி உணரக்கூடிய ஒன்று.

காமம் என்பது அணங்கோ நோயோ அல்ல என்கிறார் மிளைப்பெருங்கந்தனார். இங்கு அணங்கு என்பதற்கு சோகம், துயரம் என்று பொருள் கொள்ளலாம். வெறி வந்தாடுதல் என்ற பொருள் கொண்டால் அந்த கணம் மட்டுமே தோன்றும் உணர்வெழுச்சி என்ற பொருளும் வருகிறது அல்லவா? சரி, துயரமோ, உணர்வெழுச்சியோ, நோயோ அல்ல காமம். பின் என்ன தான் அது? விளங்கங்களுக்குள் போவதற்கு முன்... இங்கு காமம் என்பதை உடல்சார்ந்த காமம் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் உளம் சார்ந்த காதலையும் குறிப்பதாக கொண்டால் பாடலின் வீர்யம் அதிகரிப்பதாகத் தோன்றுகிறது.

முதல் விளக்கத்தை பார்க்கலாம்.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்றாள் மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.

- மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 136)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. அது குறைவதும் இல்லை, தணிவதும் இல்லை. அதிமதுர தழைகளை உண்ட யானையின் உணர்வெழுச்சி போன்றது அது. யானை ஒரு முறை மிக இனிப்பான அந்த தழைகளை உண்டதும் அது உணர்வெழுச்சு கொள்கிறது. அந்த உணர்வெழுச்சி எங்கே போகிறது? எங்கும் இல்லை. தணியாது குறையாது அதனுள் உறைகிறது அந்த உணர்வெழுச்சி. அதே தழைகளை மீண்டும் பார்த்த கணம் அது குடம் உடைந்து நீர் வெளியேறுவது போல வெளியேறுகிறது. அது போன்றது தான் காதலும் என்கிறார். காதல் ஒரு முறை வரும் உணர்வெழுச்சி அல்ல. காதல் கொண்டவரை காணும் போதெல்லாம் பொங்கும் உணர்வு. இதுவே முதல் விளக்கம்.

அடுத்த விளக்கம்,

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

- மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 204)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. மேட்டு நிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை முதிய பசு ஒரே சமயத்தில் உண்டு முடிக்காமல் அசை போட்டுக்கொண்டே இருக்குமே அது போல நினைக்க நினைக்க இன்பம் தருவது அது. இலை, புல் ஆகியவை ஜீரணிக்க மிகவும் கடினமான பொருட்கள். ஒவ்வொரு மிருகமும் இதை ஒவ்வொரு விதத்தில் எதிர்கொள்கிறது. ஆடு மாடு போன்ற கால்நடைகள் உண்ட இலைகளை மீண்டும் வாய்பகுதிக்கு கொண்டு வந்து அசை போடுகின்றன. வயதான பசுவின் ஜீரணசக்தி இன்னமும் மழுங்கியே இருக்கும். அசை போடுதலின் நீளம் அதிகமாகவே இருக்கும். அசை போடப் போட இலையிலிருந்து புதுப்புது சுவைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த இலைகளுடன் ஏன் காதலை ஒப்புமைப்படுத்த வேண்டும்? காதலும் அது நிகழும் பொழுது முழுதும் புரிவதில்லையா? அதை அசை போடப் போடத்தான் பிடிபடுகிறதா? காதல் என்ன என்பதும் ஒவ்வொரு முறை “அசை” போடும் போதும் புதிதாக உருவாகி வருகிறதா?

இன்னொன்றும் உள்ளது. இந்த இரண்டாம் விளக்கம் முதல் விளக்கத்தின் ஒரு வெற்றிடத்தை நிரப்புகிறது. முதல் விளக்கத்தில் காதல் காதலிப்பவரை காணும் தோறும் வரும் உணர்ச்சி என்கிறது. எனில் காணாத போது? காணாத போதும் அசை போடுதலை போன்று இன்பம் பயப்பது அது.


குறிப்பு : எனது பழைய கட்டுரை ஒன்றின் நீட்சி இது.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

இல்லை தவறவர்க்கு ஆயினும்..


வசதிக்கென ஒன்றுக்கிரண்டாக வாங்கி வைத்த சங்க இலக்கிய முழுத் தொகுப்பு நூல்கள் எட்டாத் தொலைவில் இருவேறு இடங்களில் தங்கிவிட, நினைவிலிருந்தும், இணையத்திலிருந்துமே கட்டுரைக்கான பாடல்களைத்  தேர்ந்து வருகிறேன். இம்முறை குறுந்தொகையா, புறநானூறா, நற்றிணையா எதைச் சொல்ல என்ற குழப்பத்திலிருக்கையில் 'என்னைச் சொல்லேன்' என்றாள் கோதை! பன்னிரு ஆழ்வார்களில் ஒருத்தியும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியுமான ஆண்டாள்.. அன்பால் இறைவனை ஆண்டவள் மட்டுமல்ல, எண்ணிலா இலக்கியங்களால் விரிந்து பரந்திருக்கும் தமிழின் மாபெரும் இலக்கியப் பரப்பில், வெறும் 173 பாடல்களை மட்டுமே கொண்டு என்றென்றும் தனியாட்சி செலுத்திக் கொண்டிருப்பவள்.

கோதையின் 'நாச்சியார் திருமொழியை'ப் படித்துவிட்டு காமம் மட்டுமே மிகுந்த விரகமும் விரசமுமான பாடல்கள் என்று கொச்சைப்படுத்துபவர்கள் உண்டு. ஆன்மா இறைவனை விடாது பற்றுவதை உணர்த்தப் பாடிய பாடல்கள் என அதற்குப் புனிதமேற்றிக் கொண்டாடும் வைணவர்கள் உண்டு. மார்கழி 30 நாட்களும் இறை மந்திரமெனக் கருதி திருப்பாவையை பொருளுணராதே பாடிப் பழகும் பக்தர்கள் பலர் உண்டு. ஆனால், அவள் கோபத்தையும், தாபத்தையும், ஊடலையும், நாணத்தையும் தன்னுணர்வாகக் கொண்டு, அவள் பாடல்களில் கொஞ்சிக் குழைந்து கசிந்துருகும் காதலை கவியனுபவமாகப் பெற வாய்த்தவர்களுக்கே அவளை மனதிற்கு மிக நெருங்கிய தோழியாக உணரும் வாய்ப்பு கிட்டுகிறது.

எனக்கு பொங்கிப் பெருகும் அவள் காதலை விடவும், கண்ணனின் உமிழ்நீரை சுவைக்க விரும்பும் தாபத்தை விடவும் எத்தனை புலம்பியும் தன்னிடம் வந்து சேராத கண்ணனிடம் அவள் கொள்ளும்  கோபம் தெவிட்டா உவகை தருகிறது! செல்லக் கோபங்களும், நெருங்குவதற்காகவே உருவாக்கிக் கொள்ளும் போலி விலகலும் இடைவெளிகளும், இல்லாத கோபத்திலிருந்து உருவாகும் பொய்யான வசைகளும்….  வள்ளுவர் ஏன் புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என ஊடலுக்கு மட்டுமே 3 அதிகாரங்களைப் படைத்தார் என்பதை காதலித்தவர்களால் மட்டுமே முழுமையாய் உணர இயலும்.

கீழ்வரும் பாடல் நாச்சியார் திருமொழியில் இடம்பெறுவது. திருமாலிருஞ்சோலையில் இருக்கும் பூக்கள் ஒவ்வொன்றிடமும் கண்ணனைக் காரணமாக்கிக் கோபித்துக் கொள்கிறாள் இந்த இளம்பெண்.

கார்க்கோடல் பூக்காள். கார்க் கடல்வண்ணன்என் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான்,
ஆர்க்கோ இனிநாம் பூசலிடுவது, அணிதுழாய்த்
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ. 

கார்க்கோடல் பூக்களே..கருநிறக் கடல்வண்ணன், உங்களுக்கெல்லாம் போர்க்கோலம் அணிவித்து என் மேல் போர் புரியும்படி அனுப்பிய கண்ணன் எங்கே போனான்? இனி யாரிடம் நான் கோபித்துக் கொள்வது? அவன் அணியும் துளசி மாலையின் பின்னே ஓடும் என் நெஞ்சத்தை தடுக்க முடியாதவளாயிருக்கிறேன்.. ஐயோ!

கார்க்கோடல் பூ என்பது கருங்காந்தள் மலர்.. மிக அரிதானது என்ற தகவல் உரையில் கிடைக்கிறது. (எத்தனை தேடியும் கூகுளாண்டவர் செங்காந்தளையும், வெண் காந்தளையுமே மீண்டும் மீண்டும் கொண்டு வந்து நீட்டுகிறார்.. கருங்காந்தள் புகைப்படம் எவருக்கேனும் கிடைத்தால் அறியத் தரவும்.)

கருங்காந்தள் மலர், கருமை நிறமுடையதாக பூத்திருப்பதைத் தவிர்த்து வேறு பிழையொன்றும் செய்யவில்லை. ஆனால் கண்ணன் என்னும் கருந்தெய்வத்தை  தன் நிறத்தால் ஓயாமல் நினைவூட்டிக் கொண்டிருப்பதனால், கோதை கோபம் கொள்கிறாள்.  அப்பூவின் மீதும், அப்பூவை தன் வண்ணத்திலேயே படைத்து விட்டு தான் மட்டும் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் கண்ணனின் மீதும் அக்கோபம் படர்கிறது. அவன் ஒளிந்து கொண்டிருப்பதனால் எய்தவனை விட்டு விட்டு இந்த மலரம்புகளைக் கோபிக்கத் துவங்குகிறாள். 'உமக்கு போர்க்கோலம் அணிவித்து என் மேல் போரிடும்படி அனுப்பியவன் எங்கே போய்த் தொலைந்தான்?'.. என்று.

போர்க்கோலம் என்பது என்ன? வாளும், வேலும் சுமந்து கவசமணிந்து நிற்பதா? விரிந்து மலர்ந்து மென்மையின் உருவாய்  நிற்கும் பூக்களுக்கும் போருக்கும் என்ன தொடர்பு? இங்கே போர் அவள் உள்ளத்தில் நிகழ்கிறது. அவளின் அகம் ஒரு அணியிலும், கண்ணனை நினைவூட்டும் புறவுலகம் மொத்தமுமாய்த் திரண்டு மற்றோர் அணியிலும் நின்று சதா சர்வ காலமும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கும் மாயப் போர் அது. எதிரணியின் தலைவன் என்று தானே போர்க்களம் புக வருகிறானோ அன்று மட்டுமே முடிவிற்கு வரக் கூடிய போர். அன்று இருமைகள் மறைந்து அனைத்தும் ஒன்றேயாகத் துலங்கும்!

அவனை நினைத்து மறுகும் மனது, அவனை நினைவூட்டுபவர்களை எல்லாம் வசைபாடும் மனது..  அதே சமயம் அவன் அணிந்த துளசி மாலையைக் கண்டதுமே குழைந்துருகி பின்னே செல்லும் நெகிழ்வு.. இந்த விசித்திரத்திற்குத் தான் காதல் என்று பெயரோ?

பூக்களிடம், அவள் துவக்கும் உரையாடல் கோபத்தில் துவங்கி, வீம்பாய் வளர்ந்து, என்ன செய்தாலும் அவனை தன்னால் வெறுக்கவியலாது என்ற தன்னிரக்கத்தில் வீழ்கிறது…. ஊடலில் துவளும் பெண்மனதின் நகர்வுகளைத் துல்லியமாய் புலப்படுத்தும் மிக அழகான வரைபடம் இப்பாடல். இதே வரிசையிலமைந்த இதர பாடல்கள் இங்கே.

திங்கள், 4 ஜனவரி, 2010

உறக்கமற்ற காத்திருப்பு - 3

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.

-கொல்லன் அழிசி. (பாடல் : 138)


ஊரே தூங்கியும் நான் தூங்காது விழித்திருக்கிறேன்,
என் வீட்டிற்கு வெளியே உள்ள மேட்டுநிலத்தில் நிற்கும்
மயிலின் காலடிகளைப் போன்ற இலைகளைக் கொண்ட
நொச்சி மரத்தின் அழகிய கிளைகள் உதிர்க்கும்
மலர்களின் ஓசையை கேட்ட படியே

குறுந்தொகையின் மிகச்சிறந்த கவிதையினை தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் இந்த கவிதையையே தேர்ந்தெடுப்பேன். நான் இந்த இரவிலும் உறங்காதிருக்கிறேன், மரம் மலர்களை உதிர்க்கும் ஓசையை கேட்டபடி... இவ்வளவு தான் இந்த கவிதை. இவ்வளவு தானா? வாசகனின் மேல் அபாரமான நம்பிக்கையை வைக்கும் குறுந்தொகை கவிதைகளுள் இதுவும் ஒன்று (செங்களம் பட... இன்னொரு கவிதை). ஜெயமோகன் இக்கவிதையை பற்றி சங்கச்சித்திரங்கள் நூலில் பேசும் போது இவ்வாறு சொல்கிறார்.

மலர் உதிரும் ஓசையை கேட்டோம் என்றால் என்ன பொருள்? அத்தனை செவிகூர்ந்தது என்றா? நெஞ்சின் எண்ணங்களின் ஒலியா அது? இல்லை, பூத்துக் காத்திருந்த நம்பிக்கைகள் உதிரும் ஒலியா? காலடி இல்லாது நடக்கும் காலம் தானா? இத்தனை மௌனமாகச் சொல்லப்படவேண்டிய அந்த உக்கிரம் தான் என்ன?
- சங்கச்சித்திரங்கள் (பக் : 144)


மலர் உதிரும் ஓசையை கேட்டு விட முடியுமா என்ன? எனில் கவிஞன் கேட்பது எதை? வெளியே நிற்கும் மரம் இவனது அகத்தில் உதிர்க்கும் பூவின் ஓசையையா? இந்த கவிதையி ல் குடிகொண்டுள்ள அபாரமான அமைதியே வாசகனின் இடம். வாசகனின் அனுபவங்களால் நிரப்பப்படவேண்டிய வெளி அது. ஒரு ஜென் கவிதை உண்டு.

நேற்றிரவும் அல்ல,
இன்று காலையும் அல்ல -
பூசணிப் பூக்கள் மலர்ந்தது.

- மட்ஸுவோ பாஷோ (மொழிபெயர்ப்பு : யுவன் சந்திரசேகர், பெயரற்ற யாத்ரீகன்)


இந்த கவிதையை இது வரை நானும் காயத்ரியும் எத்தனையோ சந்தர்பங்களில் சந்தித்திருக்கிறோம். எப்போது காதல் வந்தது? எப்போது அந்த கவிதை புரிய ஆரம்பித்தது? அந்த பகை எந்த புள்ளியில் உருவானது? எப்போது எனை தொற்றிக்கொண்டது இந்த மென்சோகம்? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான். பூசணிப் பூக்கள் மலர்ந்த போது. எப்போதெல்லாம் ஒரு நிகழ்வு தனது "எப்போதை" பூடகமாக மறைத்துவைத்திருக்கிறதோ... அப்போதெல்லாம் இந்த கவிதை வந்து போகும். ஏனெனில் இந்த கவிதை நம் மனதில் ஒரு வெற்று கிண்ணத்தை வைக்கின்றது. வாசகனின் அனுபவங்கள் தானாய் வந்து கிண்ணத்தை நிறைக்கின்றன. கடலையும் அடைக்கவல்ல கிண்ணம் அது. இந்த குறுந்தொகை பாடலிலும் இதுவே காணக்கிடைக்கிறது. இங்கு நிகழ்வது "இரவில் ஒலிகேட்டபடி உறங்காதிருத்தல்" மட்டுமே. நான் இதை காத்திருப்பு என்கிறேன். ஊடல் கொண்ட இரவினில் அது குற்றவுணர்வு. இழப்பின் துக்கம் தாளாத இரவினில், பிரிவாற்றாமை. உக்கிரமான உதாசனத்திற்கு உள்ளான இரவினில், கழிவிரக்கம். திசைகள் தொலைத்த இரவினில், வெறுமை. காரணமேதுமின்றி, உறக்கம் கொள்ளாத இரவினில், கடலினும் பெரிய கங்குல் வெள்ளத்தை கடக்க உதவும் ஓடமாக மாறலாம் அந்த மணிமருள் பூவின் பாடு நனி. ஒரு கவிதையை நாம் வாசித்து முடிக்கும் போது அந்த கவிதை நம் மனதினுள் தன் வாழ்வினை துவங்குகின்றது. இனி நிகழ்வதெல்லாம் நம் வாழ்க்கை அக்கவிதையுடன் நிகழ்த்தும் உரையாடல்களே.

வெள்ளி, 1 ஜனவரி, 2010

வாழ்வைச் சுவைத்தல்.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அது வழங்கிச் சென்ற அனுபவங்களின் ஐந்தொகையைக் கணக்கிடும் வழக்கம் எந்த வயதிலிருந்து தொடங்கியதெனத் தெரியவில்லை. என்னளவில், கடந்து சென்ற ஏனைய ஆண்டுகளை விடவும் 2009 மகிழ்வின் விகிதாச்சாரத்தை மட்டுமே அதிகரித்துத் தந்திருக்கிறது. வாழ்வு சுவைக்கத்தக்கது என்ற எண்ணமும், வாழ்வின் மீதான வேட்கையும் மனதின் ஆழச்சுனை ஒன்றில் ஊறிச் சுரந்தபடி இருக்கின்றன.

இந்தப் புத்தாண்டிற்கென மங்கலமான பாடல் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழிய' வாழ்த்தும் ஆண்டாள், 'நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க' என வாழ்த்தும் ஓரம்போகியார், ஞாயிற்றையும் மழையையும் போற்றி வணங்கும் இளங்கோ, இவர்கள் யாரையேனும் தேரும் முன்பாக நினைவில் பளிச்சிட்டது புறநானூறு.  கடவுளை வணங்குவதைக் காட்டிலும், நாட்டினை, இயற்கை வளங்களை வாழ்த்துவதை விடவும் தனிமனிதனின் மனநிறைவைப் பேசுபொருளாய்க் கொண்ட இந்தக் கவிதை வெகு உன்னதமானதாய்ப் படுகிறது.“யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதந்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே”

- புறம்: 191. பாடியவர் பிசிராந்தையார்


ஆண்டுகள் பல கடந்தும் நரை மூப்பு இல்லாமல் வாழ்தலை எப்படி சாத்தியமாக்கினீர்கள்? என்று என்னைக் கேட்பீர்களானால்.. கேளுங்கள்.. இவையனைத்தும் தான் என் இளமைக்கான காரணிகள்.

*மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் - மாட்சிமை பொருந்திய என் மனைவியும், என் குழந்தைகளும் நற்குணங்களால் நிரம்பியவர்கள்.  

மாண்ட என்ற சொல்லுக்கு மாட்சிமை, மாண்பு என்று பொருள். மாட்சிமை என்ற தமிழ்ச்சொல்லுக்கு நிகராக Greatness, excellence, splendour, glory, dignity, nobleness ஆகிய சொற்களை வழங்குகிறது சென்னை தமிழ் லெக்சிகன்! பெண்ணடிமைக்கென நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டிருக்கும் நம் சமூகத்தில் மனைவியை நேசிக்க மட்டுமின்றி மதிக்கவும் தெரிந்த ஆண் மனம், உளமார வணங்குதற்குரியது. இன்றும் நம்மிடையே மாட்சிமை பொருந்திய மனைவியர் பலர் உண்டு.. அதனை நேர்மையாய் ஒப்புக்கொள்ளும், பிசிராந்தையாரைப் போன்று பெருமிதமாய் பறைசாற்றிக் கொள்ளும் கணவர்கள் குறைவு.

'மக்களும் நிரம்பினர்' என்பதற்கு 'மனைவியும் மக்களும் குணங்களால் நிரம்பிய நிறைகுடங்கள் போன்றவர்கள்' என்று பொருள் கூறுவார் உண்டு. ஆனால் எனக்கு, 'மனைவியும் மக்களும் என்னில் நிரம்பினர்' என்று கவிஞர் கூறுவதாகவே படுகிறது. 'நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாததைப்' போன்றே நினைவில் வீடுள்ள மனிதனை எவராலும் தனிமைப்படுத்தி விட முடிவதில்லை. நற்குணங்களால், அன்பால் நிரம்பிய மனைவியையும் குழந்தைகளையும் மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டதாலேயே அவர் வாழ்க்கை சலிக்காததாக, மூப்படையாததாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது.

*யான் கண்டனையர் என் இளையரும் - என்னுடன் பிறந்த என் இளைய சகோதரர்கள் என்னைப் போன்றவர்களே. என் வழி நின்று, என்னைப் பின்பற்றி சகல அம்சங்களிலும் நானாகவே விளங்கும் என் இளைய சகோதரர்கள்.  மரத்தைப் பார்க்கையில் அதன் வேரைப் பார்க்க  அவசியமில்லை தானே?

*வேந்தனும் அல்லவை செய்யான்; காக்கும் - எமது அரசனும் குடிமக்களுக்கு தீங்கிழைக்காதவன். காக்கக் கூடியவன்.  குடிகளைக் காப்பது அரசனின் தொழில். இங்கே, 'அல்லவை செய்யான்' என்பதை முன்னால் கூறி, 'காக்கும்' என்று தொடர்ந்து கூறும் கவிஞரின் நயத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. 'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' என்பதும் புறநானூறு. உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாது இருத்தல்! முதற்கண் என் மன்னன் கொடுங்கோலன் அல்லன். அதற்கும் மேலாக குடிமக்களைக் காக்கும் திறன் மிகுந்தவன். மன்னன் எவ்வழியோ மலர்தலை உலகமும் அவ்வழி தானே?

*ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே - இவையனைத்திற்கும் மேலாய் நூல் பல கற்று, கற்றவை குறித்த கர்வங்கள் ஏதுமின்றி அடக்கமும் கொள்கைப் பிடிப்பும் மிகுந்த சான்றோர்கள் பலர் நான் வாழும் ஊரில் வாழ்கிறார்கள்.

அன்பும் மாட்சிமையும் பொருந்திய மனைவி, நற்குணங்களும் அறிவும் நிரம்பிய குழந்தைகள், தன்னைப் போன்றே பொறுப்புணர்வு மிகுந்த சகோதரர்கள், மக்களை அலைக்கழிக்காது நன்மைகள் செய்யும் நல்லரசு , கவலை கொள்ளத் தேவையில்லாத கல்வியறியவும் சான்றாண்மையும் மிகுந்த சமூகம்.. மனிதன் பிணி மூப்பின்றி மகிழ்வோடு வாழத் தேவையென பிசிராந்தையார் கூறும் இக்காரணிகள் அனைத்தையும், இப்புத்தாண்டு அனைவருக்கும் வழங்க வேண்டுமாய்  அணிலாடு முன்றில் அன்போடு வாழ்த்துகிறது. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!