வெள்ளி, 1 ஜனவரி, 2010

வாழ்வைச் சுவைத்தல்.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அது வழங்கிச் சென்ற அனுபவங்களின் ஐந்தொகையைக் கணக்கிடும் வழக்கம் எந்த வயதிலிருந்து தொடங்கியதெனத் தெரியவில்லை. என்னளவில், கடந்து சென்ற ஏனைய ஆண்டுகளை விடவும் 2009 மகிழ்வின் விகிதாச்சாரத்தை மட்டுமே அதிகரித்துத் தந்திருக்கிறது. வாழ்வு சுவைக்கத்தக்கது என்ற எண்ணமும், வாழ்வின் மீதான வேட்கையும் மனதின் ஆழச்சுனை ஒன்றில் ஊறிச் சுரந்தபடி இருக்கின்றன.

இந்தப் புத்தாண்டிற்கென மங்கலமான பாடல் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழிய' வாழ்த்தும் ஆண்டாள், 'நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க' என வாழ்த்தும் ஓரம்போகியார், ஞாயிற்றையும் மழையையும் போற்றி வணங்கும் இளங்கோ, இவர்கள் யாரையேனும் தேரும் முன்பாக நினைவில் பளிச்சிட்டது புறநானூறு.  கடவுளை வணங்குவதைக் காட்டிலும், நாட்டினை, இயற்கை வளங்களை வாழ்த்துவதை விடவும் தனிமனிதனின் மனநிறைவைப் பேசுபொருளாய்க் கொண்ட இந்தக் கவிதை வெகு உன்னதமானதாய்ப் படுகிறது.



“யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதந்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே”

- புறம்: 191. பாடியவர் பிசிராந்தையார்


ஆண்டுகள் பல கடந்தும் நரை மூப்பு இல்லாமல் வாழ்தலை எப்படி சாத்தியமாக்கினீர்கள்? என்று என்னைக் கேட்பீர்களானால்.. கேளுங்கள்.. இவையனைத்தும் தான் என் இளமைக்கான காரணிகள்.

*மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் - மாட்சிமை பொருந்திய என் மனைவியும், என் குழந்தைகளும் நற்குணங்களால் நிரம்பியவர்கள்.  

மாண்ட என்ற சொல்லுக்கு மாட்சிமை, மாண்பு என்று பொருள். மாட்சிமை என்ற தமிழ்ச்சொல்லுக்கு நிகராக Greatness, excellence, splendour, glory, dignity, nobleness ஆகிய சொற்களை வழங்குகிறது சென்னை தமிழ் லெக்சிகன்! பெண்ணடிமைக்கென நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டிருக்கும் நம் சமூகத்தில் மனைவியை நேசிக்க மட்டுமின்றி மதிக்கவும் தெரிந்த ஆண் மனம், உளமார வணங்குதற்குரியது. இன்றும் நம்மிடையே மாட்சிமை பொருந்திய மனைவியர் பலர் உண்டு.. அதனை நேர்மையாய் ஒப்புக்கொள்ளும், பிசிராந்தையாரைப் போன்று பெருமிதமாய் பறைசாற்றிக் கொள்ளும் கணவர்கள் குறைவு.

'மக்களும் நிரம்பினர்' என்பதற்கு 'மனைவியும் மக்களும் குணங்களால் நிரம்பிய நிறைகுடங்கள் போன்றவர்கள்' என்று பொருள் கூறுவார் உண்டு. ஆனால் எனக்கு, 'மனைவியும் மக்களும் என்னில் நிரம்பினர்' என்று கவிஞர் கூறுவதாகவே படுகிறது. 'நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாததைப்' போன்றே நினைவில் வீடுள்ள மனிதனை எவராலும் தனிமைப்படுத்தி விட முடிவதில்லை. நற்குணங்களால், அன்பால் நிரம்பிய மனைவியையும் குழந்தைகளையும் மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டதாலேயே அவர் வாழ்க்கை சலிக்காததாக, மூப்படையாததாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது.

*யான் கண்டனையர் என் இளையரும் - என்னுடன் பிறந்த என் இளைய சகோதரர்கள் என்னைப் போன்றவர்களே. என் வழி நின்று, என்னைப் பின்பற்றி சகல அம்சங்களிலும் நானாகவே விளங்கும் என் இளைய சகோதரர்கள்.  மரத்தைப் பார்க்கையில் அதன் வேரைப் பார்க்க  அவசியமில்லை தானே?

*வேந்தனும் அல்லவை செய்யான்; காக்கும் - எமது அரசனும் குடிமக்களுக்கு தீங்கிழைக்காதவன். காக்கக் கூடியவன்.  குடிகளைக் காப்பது அரசனின் தொழில். இங்கே, 'அல்லவை செய்யான்' என்பதை முன்னால் கூறி, 'காக்கும்' என்று தொடர்ந்து கூறும் கவிஞரின் நயத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. 'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' என்பதும் புறநானூறு. உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாது இருத்தல்! முதற்கண் என் மன்னன் கொடுங்கோலன் அல்லன். அதற்கும் மேலாக குடிமக்களைக் காக்கும் திறன் மிகுந்தவன். மன்னன் எவ்வழியோ மலர்தலை உலகமும் அவ்வழி தானே?

*ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே - இவையனைத்திற்கும் மேலாய் நூல் பல கற்று, கற்றவை குறித்த கர்வங்கள் ஏதுமின்றி அடக்கமும் கொள்கைப் பிடிப்பும் மிகுந்த சான்றோர்கள் பலர் நான் வாழும் ஊரில் வாழ்கிறார்கள்.

அன்பும் மாட்சிமையும் பொருந்திய மனைவி, நற்குணங்களும் அறிவும் நிரம்பிய குழந்தைகள், தன்னைப் போன்றே பொறுப்புணர்வு மிகுந்த சகோதரர்கள், மக்களை அலைக்கழிக்காது நன்மைகள் செய்யும் நல்லரசு , கவலை கொள்ளத் தேவையில்லாத கல்வியறியவும் சான்றாண்மையும் மிகுந்த சமூகம்.. மனிதன் பிணி மூப்பின்றி மகிழ்வோடு வாழத் தேவையென பிசிராந்தையார் கூறும் இக்காரணிகள் அனைத்தையும், இப்புத்தாண்டு அனைவருக்கும் வழங்க வேண்டுமாய்  அணிலாடு முன்றில் அன்போடு வாழ்த்துகிறது. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

4 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

நல்லா படிக்க விளக்கமாக இருக்கிறது..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நேசமித்ரன் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள்

அணிலாடு முன்றிலுக்கும் உங்களிருவருக்கும்...

காயத்ரி சித்தார்த் சொன்னது…

அண்ணாமலையான்.. நேசமித்ரன்.. நன்றி.

பெயரில்லா சொன்னது…

நினைவில் வீடுள்ள மனிதனை எவராலும் தனிமைப்படுத்தி விட முடிவதில்லை.|| vunmaithaan