திங்கள், 4 ஜனவரி, 2010

உறக்கமற்ற காத்திருப்பு - 3

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.

-கொல்லன் அழிசி. (பாடல் : 138)


ஊரே தூங்கியும் நான் தூங்காது விழித்திருக்கிறேன்,
என் வீட்டிற்கு வெளியே உள்ள மேட்டுநிலத்தில் நிற்கும்
மயிலின் காலடிகளைப் போன்ற இலைகளைக் கொண்ட
நொச்சி மரத்தின் அழகிய கிளைகள் உதிர்க்கும்
மலர்களின் ஓசையை கேட்ட படியே

குறுந்தொகையின் மிகச்சிறந்த கவிதையினை தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் இந்த கவிதையையே தேர்ந்தெடுப்பேன். நான் இந்த இரவிலும் உறங்காதிருக்கிறேன், மரம் மலர்களை உதிர்க்கும் ஓசையை கேட்டபடி... இவ்வளவு தான் இந்த கவிதை. இவ்வளவு தானா? வாசகனின் மேல் அபாரமான நம்பிக்கையை வைக்கும் குறுந்தொகை கவிதைகளுள் இதுவும் ஒன்று (செங்களம் பட... இன்னொரு கவிதை). ஜெயமோகன் இக்கவிதையை பற்றி சங்கச்சித்திரங்கள் நூலில் பேசும் போது இவ்வாறு சொல்கிறார்.

மலர் உதிரும் ஓசையை கேட்டோம் என்றால் என்ன பொருள்? அத்தனை செவிகூர்ந்தது என்றா? நெஞ்சின் எண்ணங்களின் ஒலியா அது? இல்லை, பூத்துக் காத்திருந்த நம்பிக்கைகள் உதிரும் ஒலியா? காலடி இல்லாது நடக்கும் காலம் தானா? இத்தனை மௌனமாகச் சொல்லப்படவேண்டிய அந்த உக்கிரம் தான் என்ன?
- சங்கச்சித்திரங்கள் (பக் : 144)


மலர் உதிரும் ஓசையை கேட்டு விட முடியுமா என்ன? எனில் கவிஞன் கேட்பது எதை? வெளியே நிற்கும் மரம் இவனது அகத்தில் உதிர்க்கும் பூவின் ஓசையையா? இந்த கவிதையி ல் குடிகொண்டுள்ள அபாரமான அமைதியே வாசகனின் இடம். வாசகனின் அனுபவங்களால் நிரப்பப்படவேண்டிய வெளி அது. ஒரு ஜென் கவிதை உண்டு.

நேற்றிரவும் அல்ல,
இன்று காலையும் அல்ல -
பூசணிப் பூக்கள் மலர்ந்தது.

- மட்ஸுவோ பாஷோ (மொழிபெயர்ப்பு : யுவன் சந்திரசேகர், பெயரற்ற யாத்ரீகன்)


இந்த கவிதையை இது வரை நானும் காயத்ரியும் எத்தனையோ சந்தர்பங்களில் சந்தித்திருக்கிறோம். எப்போது காதல் வந்தது? எப்போது அந்த கவிதை புரிய ஆரம்பித்தது? அந்த பகை எந்த புள்ளியில் உருவானது? எப்போது எனை தொற்றிக்கொண்டது இந்த மென்சோகம்? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான். பூசணிப் பூக்கள் மலர்ந்த போது. எப்போதெல்லாம் ஒரு நிகழ்வு தனது "எப்போதை" பூடகமாக மறைத்துவைத்திருக்கிறதோ... அப்போதெல்லாம் இந்த கவிதை வந்து போகும். ஏனெனில் இந்த கவிதை நம் மனதில் ஒரு வெற்று கிண்ணத்தை வைக்கின்றது. வாசகனின் அனுபவங்கள் தானாய் வந்து கிண்ணத்தை நிறைக்கின்றன. கடலையும் அடைக்கவல்ல கிண்ணம் அது. இந்த குறுந்தொகை பாடலிலும் இதுவே காணக்கிடைக்கிறது. இங்கு நிகழ்வது "இரவில் ஒலிகேட்டபடி உறங்காதிருத்தல்" மட்டுமே. நான் இதை காத்திருப்பு என்கிறேன். ஊடல் கொண்ட இரவினில் அது குற்றவுணர்வு. இழப்பின் துக்கம் தாளாத இரவினில், பிரிவாற்றாமை. உக்கிரமான உதாசனத்திற்கு உள்ளான இரவினில், கழிவிரக்கம். திசைகள் தொலைத்த இரவினில், வெறுமை. காரணமேதுமின்றி, உறக்கம் கொள்ளாத இரவினில், கடலினும் பெரிய கங்குல் வெள்ளத்தை கடக்க உதவும் ஓடமாக மாறலாம் அந்த மணிமருள் பூவின் பாடு நனி. ஒரு கவிதையை நாம் வாசித்து முடிக்கும் போது அந்த கவிதை நம் மனதினுள் தன் வாழ்வினை துவங்குகின்றது. இனி நிகழ்வதெல்லாம் நம் வாழ்க்கை அக்கவிதையுடன் நிகழ்த்தும் உரையாடல்களே.

11 கருத்துகள்:

விழியன் சொன்னது…

அருமையான பகிர்வு சித்தார்த். கவிதைகளை எப்படி உள்வாங்கி ரசிக்க வேண்டும் என உன்னிடம் இருந்து நிறையவே கற்றுக்கொள்கிறேன்.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நன்றி விழியன். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நிலாரசிகன் சொன்னது…

அற்புதமான பதிவு சித்தார்த்.

//ஒரு கவிதையை நாம் வாசித்து முடிக்கும் போது அந்த கவிதை நம் மனதினுள் தன் வாழ்வினை துவங்குகின்றது.//

அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

Unknown சொன்னது…

நன்றி நிலா.

முனைவர் அண்ணாகண்ணன் சொன்னது…

நல்ல பகிர்வு சித்தார்த்.

'பூ பூக்கும் ஓசை; அதைக் கேட்கத்தான் ஆசை' என 'மினசார கனவு' படத்தில் ஒரு பாடல் வரியும் இடம் பெற்றுள்ளது.

உங்கள் ஒவ்வொரு பதிவுமே சிறப்புதான். வாழ்த்துகள்.

Thirumal சொன்னது…

//எப்போதெல்லாம் ஒரு நிகழ்வு தனது "எப்போதை" பூடகமாக மறைத்துவைத்திருக்கிறதோ... அப்போதெல்லாம் இந்த கவிதை வந்து போகும்//

எப்பிடிப்பா இப்பிடியெல்லாம்..?
ரொம்ப வசீகரமான எழுத்து உங்களது.

Unknown சொன்னது…

மிக்க நன்றி அண்ணாகண்ணன்.

நேசமித்ரன் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள்

நேர்ந்தது என்பது தவிர நெகிழ்ந்து
சொல்ல வியலாத தருணங்களில் காதலும் ஒன்று என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சித்தார்த்

உங்களின் பார்வை மூன்றாம் கண் பார்வை “அதிநாயகர்களின் கட்டுரை”
அதிர்வலை

☀நான் ஆதவன்☀ சொன்னது…

அருமை சித்தார்த்

பெயரில்லா சொன்னது…

அந்த பகை எந்த புள்ளியில் உருவானது? எப்போது எனை தொற்றிக்கொண்டது இந்த மென்சோகம்?||

ஊடல் கொண்ட இரவினில் அது குற்றவுணர்வு. இழப்பின் துக்கம் தாளாத இரவினில், பிரிவாற்றாமை. உக்கிரமான உதாசனத்திற்கு உள்ளான இரவினில், கழிவிரக்கம். திசைகள் தொலைத்த இரவினில், வெறுமை.||arumai

பெயரில்லா சொன்னது…

இனி நிகழ்வதெல்லாம் நம் வாழ்க்கை அக்கவிதையுடன் நிகழ்த்தும் உரையாடல்களே. || mm