செவ்வாய், 3 ஏப்ரல், 2012

நல்கார் நயவாராயினும்...

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.(குறுந்தொகை 60)

பொருள் : சிறிய கூதளச்செடிகள் ஆடும் பெரும் மலை. அங்கு ஒரு பெரிய தேனடையை கண்ட காலில்லாத முடவன், தன் உள்ளங்கையை சிறுகுடைபோல குவித்து (சிறுகுடைக்கு தேனெடுக்கும் கூடை என்றும் பொருள் உண்டாம்) தேனடையை நோக்கி சுட்டி கையினை நக்குவது போல... என் காதலர் என்னை நினைக்கவோ விரும்பவோ செய்யவில்லையெனினும், அவரை பலமுறை கண்டுகொண்டிருப்பதே கூட என் உள்ளத்துக்கு இனியதே.....
***********

 ஜெயமோகனின் குறுந்தொகை குறித்த உரையினை சமீபத்தில் கேட்டேன் [http://www.youtube.com/watch?v=0S-GyhYoA6Q]. பிரமாதமான உரை. அந்த உரையில் பழங்கவிதைகளை வாசிக்க நமக்கு இரண்டு மரபுகள் உண்டு என்கிறார் ஜெ. அசை பிரித்து வாசித்தல், அசை போட்டு வாசித்தல். அசை பிரித்தல் என்பது ஒரு அளவிற்கு இயந்திரத்தனமான வாசிப்பு. கவிதையின் மொழியை, அதை சூழ்ந்திருக்கும் திணை, துறை போன்ற இலக்கண கருவிகளை மட்டும் கொண்டு கவிதையை அணுகுதல். அசை போட்டு வாசித்தல் என்பது கவிதையை வாழ்வினையும் கொண்டு அணுகுதல்... அந்த உரையில் ஜெமோ சொன்ன இன்னொரு கருத்து, சங்க கால கவிஞர்கள் நம்மை விடவும் இயற்கைக்கு இன்னும் அருகில் நின்று எழுதியவர்கள். அதனால் நம் பூக்களையும் மரங்களையும் பறவைகளையும் புரிந்துகொள்ளாமல் கவிதையை முழுவது புரிந்துகொள்ள முடியாது...


*********** காலை நேசன் இந்த குறுந்தொகை பாடலை கூகுள் ப்ளஸில் பகிர்ந்த போது இதை குறித்து அசை போடலாமா என்று தோன்றியது. இப்பாடலில் வரும் கூதளச்செடியினை பற்றி தேடிய பொழுது இதன் அறிவியல் பெயர் convovulus arvensis என்று தெரிந்தது... அதன் புகைப்படம் : ஆக கூதளச்செடி என்பது வெள்ளை பூக்களை உடைய சிறிய செடி. மலைமுழுதும் இதன் பூக்கள் நிரம்பி மலையே வெள்ளையாக தோன்றும் சித்திரம் உருவாகிறது மனதில்...கூதள் ஆடிய நெடுவரை... மலையே சன்னமாக ஆடுவது போல... பூக்களால் வெள்ளையாய் தோன்றும் மலையில் பெருந்தேனடை தனியாக தெரிகிறது. முடவன் அத்தேனடை இருக்கும் மரத்தின் மீதென்ன அம்மரமிருக்கும் மலையின் மீதுமே ஏற முடியாது... அவன் செய்யக்கூடியதெல்லாம் மலையடிவாரத்தில் இருந்தபடி எட்டா உயரத்தில் சிறு புள்ளியாய் தோன்றும் தேனடையை கையினால் சுட்டி நக்குவது மட்டும் தான். அடையவே முடியாத, காதலிக்கும் இவளது இருப்பையே கூட அறிந்துகொள்ளாத உயரத்தில் நிற்கும் ”நல்குதலும் நயவுதலும்” செய்யா ஒரு ஆளுமையை நோக்கிய காதல் என்பதன் வலி இது.... மரத்தை அல்ல... மரம் இருக்கும் மலையையும் நெருங்கவியலாத முடக்காதல்....

இங்கு ஆண்டாள் நினைவுக்கு வருகிறாள். ஆண்டாளின் கதைக்கு “அரங்கன்” வந்து அவளை ஏற்றுக்கொண்டான் என்பது எத்தனை நாடகத்தனமான முடிவு! கிரேக்க நாடகவியலில் Deux ex machina என்ற கருத்தாக்கம் ஒன்று உண்டு. தோராயமாக “கருவியிலிருந்து கடவுள்” என்று மொழிபெயர்க்கலாம். ஒரு நாடகத்தில் தீர்வே இல்லாத சிக்கல்கள் உருவாகும் பொழுது Crane போன்ற கருவியின் மூலம் “கடவுளர்கள்” மேடைக்கு கொண்டுவரப்படுவர். அவர்கள் ட்ரொய்ங்ங்ங் என்று ஒரு கையசைவில் அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடுவார்கள்...ஆண்டாள் அரங்கனை சேருவதும் இப்படியான ஒரு deux ex machina தான்.

ஆண்டாள் தன் பாவனைகளை உண்மையென நம்பியவள். மற்ற ஆழ்வார்களுக்கும் ஆண்டாளுக்குமான வேறுபாடு அது தான் என்று படுகிறது. பெரியாழ்வாருக்கும் நம்மாழ்வாருக்கும் கண்ணனின் தாயாவதும் காதலியாவதும் காதலியின் தாயாய் நின்று கண்ணனை பழிப்பதும் எல்லாமே ஒரு பாவனை தான். அவர்கள் வாழ்விற்கும் இந்த பாவனைக்குமான வேறுபாட்டினை அறிந்தே இருந்தனர். ஆனால் ஆண்டாள் அந்த கோட்டை தாண்டி, பாவனையே அவள் என்ற நிலைக்கு சென்றுவிட்டவள்.

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

என்கிறாள்...பாவனையே வாழ்வான நிலை... இந்நிலையில் ”கடவுள்” இறங்கி வராவிட்டால் அவள் நிலை என்ன?

புராணம் வரலாற்றை போல கொடுமையானது அல்ல. அது கருணை நிறைந்தது... கடவுளை கொணர்ந்து அவளை காப்பாற்றிவிட்டது. நாச்சியார் திருமொழி முழுதுமே கற்பனையெனும் நெடுவரையின் மேல் நின்ற அரங்கனை நோக்கி ஆண்டாள் செய்த ”சுட்டுபு நக்குதல்” தான் என்ற எண்ணம் தோன்றிவிட்டால் அப்பாடல்களின் கொண்டாட்டங்கலெல்லாம் மறைந்து ஒரு சோக இருள் படிந்துவிடுகிறது அதன் வரிகளில்.... 

3 கருத்துகள்:

rajasundararajan சொன்னது…

தேனெடுப்பவர்கள் சொல்லி, எங்கேயோ வாசித்தது: 'கொம்புத்தேன்' மரக்கிளைகளில் அடைகட்டிச் சேர்ப்பது. 'பெருந்தேன்' மலைப்பிளவில் அடைகட்டிச் சேர்ப்பது. கொம்புத்தேனை விடப் பெருந்தேன் சுவை மிக்கதாம். நூலேணி கட்டி இறங்கி எடுப்பார்களாம்.

நீங்கள் பதிந்திருக்கிற கூதாளிப் படம் சரிதான். இதன் மலர் வெண்ணிற முடையது (முருகு. 192); கூதிர்ப் பருவத்தில் அலர்வது (நற். 244:2).

நீங்கள் சுட்டுகிற பாவனைதான் இங்கே கவிதைச் சுவை.

குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்கு, காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே!

இதில், 'இருங்கால் முடவன்' என்பதினும் 'இருக்கை முடவன்' என்னும் பாடம் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. கால்களற்று, குண்டியில் இழுகிக் கிடக்கிற ஒரு முடவன்.

சங்கப் பாக்களில் அடைமொழி போல வருவனவற்றில் கருத்தூன்ற வேண்டும். பெருந்தேனுக்கு அடைமொழி, 'குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரை'. பெருந்தேனை எடுக்க இந்தக் காலத்தில் நூலேணி. அந்தக் காலத்தில் பிடித்து ஏற/ இறங்க, விழுது ஏதாவது அல்லது அருகம்புல்லாவது வேண்டும். இங்கு சொல்லப்படுவதோ 'குறுந்தாட் கூதளி'. அது பிடிமானத்துக்கு உகந்த வேரோ விழுதோ அல்ல, ஒரு பூச்செடி.

'கஜல்' பாடல் போல ஒரு பக்திப் பாடலாக இது...

siva சொன்னது…

அன்புள்ள சித்தார்த்,

இன்று திரு ஜெயமோகன் வலைத்தளம் மூலம் , உங்கள் blog வந்து அடைந்தேன் ,
ஒரு பொற்குவியல் போல உள்ளது , தொடரட்டும் உங்கள் பணி ,

வாழ்துக்கள் ,
சிவகுமார்
http://unmatthan.blogspot.in/

நிரஞ்சனா சொன்னது…

எதேச்சையாக கண்டடைந்தேன் இந்த அணிலாடு முன்றிலை. தமிழ் படிக்க ஆர்வத்தை நிறையத் தேக்கியிருக்கும் எனக்கு இத்தளம் பொக்கிஷமாய் அமையும் என்பது புரிகிறது. நன்றி நல்ல பகிர்விற்கு. நிறைய எழுதுங்கள் ஐயா.