முதன் முதலாய் சித்தார்த்தைப் பற்றிய விபரங்களைச் சொல்லி, அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அம்மாவிடம் சொன்ன தருணத்தை, மடியில் உறங்கும் மகளுக்கு வாஞ்சையாய் தலைகோதி விட்டபடியே யோசித்துக் கொண்டிருந்தேன். அன்று எவ்வித தயக்கமுமின்றி வெகு எளிதாய் அம்மாவிடம் இறக்கி வைக்க முடிந்த அச்செய்திக்கு இப்போது ஏராளமாய் கனமேறி விட்டாற் போல் இருக்கிறது. மகளாய் இருந்த போது உணராத பலவற்றை தாய்மை மெதுவாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. என் அம்மா எனக்குத் தந்திருந்த சுதந்திரம் முழுவதையும் நான் இவளுக்குத் தருவேனா என்பதில் இன்னமும் பெருத்த சந்தேகங்களுடன் தான் இருக்கிறேன்!
அன்று அம்மாவிடம் பெரிதாக எந்த சலனமும் இல்லை. ஆனால் இப்போது யோசித்தால் அன்றிரவு அவர்கள் நிம்மதியாகத் தூங்கியிருப்பார்கள் என்று தோன்றவில்லை. சிறு வயதில், பூக்கள் விரிவதை நேரில் பார்த்தே ஆக வேண்டுமென்று ஆசையிருந்தது. மல்லிகை மொக்குகளைப் பறித்துக் கொண்டு வந்து வைத்து கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். பார்த்திருக்கப் பார்த்திருக்க அவை திடுமென மலர்ந்திருக்குமேயன்றி ஒருமுறை கூட அவை இதழிதழாய் மலர்வதைப் பார்க்க முடிந்ததில்லை. சிற்றாடைகளிலிருந்து தாவணிக்கும் புடவைக்கும் ஏற்ற வயதினளாய் மகள் மாறிக் கொண்டிருப்பதை தினமும் பார்த்து ரசித்துக் கொண்டேயிருந்தாலும் அவளின் மலர்ச்சியைத் திடீரென தாய் உணர்ந்து கொள்வது, அவளின் காதலை அறிந்து கொள்ளும் தருணமாகத் தான் இருக்கக் கூடும்.
சங்க இலக்கியங்கள் இப்படி எத்தனையெத்தனை விதமான அன்னையரைக் காட்சிப்படுத்துகின்றன! மகளிடம் சிறு மாற்றம் கண்டாலும் யாரையேனும் காதலிக்கிறாளோ என்று சந்தேகத்தில் கலங்கும் தாய்மார்கள், காதலால் உடல் மெலியும் மகளை, குழந்தையாகவே பாவித்து அவள் உடல் நோயால் மெலிவதாகப் புலம்பும் தாயர்கள், காதலனோடு சென்று விட்டவளை வீதிகளில் பொங்கி வழியும் ஜனத்திரளினூடாய் கண் சலிக்கத் தேடித் தவிக்கும் அம்மாக்கள், "என் மகள் அறியாச் சிறுமி, அழைத்துச் சென்றவன் தான் கொடியவன்" என்றே நம்பிக் கொண்டிருக்கும் வெகுளிப் பெண்கள், மகள் விட்டுச் சென்ற பொருட்களைத் தொட்டுத் தொட்டு 'இது என் பெண் விளையாடிய பொம்மை, இது அவள் பேசிக் கொஞ்சிய கிள்ளை' என்று சொல்லிச் சொல்லி எஞ்சிய அனைத்திலும் அவளையே காண முயலும் பித்து மனங்கள்....
அம்மாவின் அப்போதைய கனத்த மெளனம், இன்று யோசிக்க யோசிக்க "வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்" என்னும் கலித்தொகை வரியை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியது. மனம் அவ்வரியை விடாது ஜபித்துக் கொண்டேயிருக்கிறது. மகள் காதலிக்கிறாள் எனத் தெரிய வரும்போது அது பற்றி சினவாமல் இருப்பது கூட சாத்தியம் தான்... 'வினவலும் செய்யாள்' என்பது அத்தனை வருடங்களுக்கு முந்தைய சமூகத்தில் சாத்தியம் தானா? பாடலைத் தருகிறேன்.. படித்துப் பாருங்கள்.
தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 5
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ;
அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், 10
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா! 15
ஈங்கு எவன் அஞ்சுவது;
அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், 20
அல்கலும் சூழ்ந்த வினை.'
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 5
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ;
அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், 10
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா! 15
ஈங்கு எவன் அஞ்சுவது;
அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், 20
அல்கலும் சூழ்ந்த வினை.'
காதலனைப் பார்க்கச் சென்ற பெண்ணொருத்தி அவன் சூடியிருந்த முல்லைப் பூக்களை வாங்கி ஆசையாய் சூடிக் கொள்கிறாள். வீட்டிற்குத் திரும்புகையில் அதனை தன் கூந்தலுக்குள் ஒளித்துக் கொள்கிறாள். அவளின் கூந்தலை வெண்ணெய் பூசி வாருவதற்காக அவிழ்த்த அவள் அன்னை, கீழே விழுந்த முல்லைப்பூவைக் கண்டு திடுக்கிட்டுப் போகிறாள். எனினும், அந்த அசாதாரண சூழலை மெளனத்தால் எதிர்கொள்கிறாள் அவ்வன்னை. ஏதும் வினவாமலும் அது பற்றி சினம் காட்டாமலும் அவ்விடத்தை விட்டு நீங்குகிறாள். தன் காதல் வெளிப்பட்டு விட்ட அச்சத்தை அப்பெண் தன் தோழியிடம் பகிர்ந்து கொள்கையில் "உன் பெற்றோர் அவனுக்கே உன்னை திருமணம் செய்விப்பார்கள், பயப்படாதே" என்று அவள் ஆறுதல் கூறுவதாக அமைகிறது இப்பாடல். கீழே பத்தி பிரித்து எளிய விளக்கம் கொடுத்திருக்கிறேன்.
தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு, கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு, கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
தோழி! கள் அருந்தியவன் நாணம் மறந்து தானே சென்று எல்லா உண்மைகளையும் உளறி விடுவதைப் போல (நல்ல உவமை!) நான் மறைத்து வைத்திருந்த விஷயத்தை நானே காட்டிக் கொடுத்து கையும் களவுமாக பிடிபட்டேன் தெரியுமா?
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 5
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
கால்நடைகளை மேய்க்கும் இடையர் குலத்தவனான என் காதலன் ஓர் சிறு முல்லைச் சரத்தைச் சூடி வந்தான். அதனை நான் என் கூந்தலுக்குள் ஒளித்து முடிந்து கொண்டேன்.
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண, அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ;
வெண்ணெய் பூசுவதற்காக அன்னை என் கூந்தலை விரித்த போது அவள் முன்னால் கீழே வீழ்ந்தது அப்பூ.
அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், 10
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்;
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்;
அவள் அது பற்றி என்னைக் கேட்கவும் இல்லை. கோபம் கொள்ளவுமில்லை. நெருப்பைத் தொட்டவரைப் போல கை உதறி என்னை விட்டு விலகி அப்பால் சென்று விட்டாள்.
யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.
நானும் என்னுடைய கூந்தலை முடிந்து கொண்டு அருகிலிருந்த சோலைக்குள் சென்று ஒளிந்து கொண்டேன்.
' 'அதற்கு, எல்லா! 15
ஈங்கு எவன் அஞ்சுவது;
அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், 20
அல்கலும் சூழ்ந்த வினை.'
ஈங்கு எவன் அஞ்சுவது;
அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், 20
அல்கலும் சூழ்ந்த வினை.'
அடியே! இதற்காக ஏன் அச்சப்படுகிறாய்? பயப்படாதே. நீ அவன் சூடிய பூவைச் சூடியதால் உன் விருப்பத்தை நம் வீட்டவர் உணர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களே உன்னை அவனுக்கு மணம் முடித்து வைப்பர். நிச்சயம் அதுவே நடக்கும்.
இத்தோழி சொன்னாற் போல பின்னாளில் அவர்களே முன்னின்று தன் மகள் விரும்பியவனுக்கே அவளை மணம் முடித்து வைத்திருக்கலாம். சிறு வயதிலிருந்து மகள் விரும்பிக் கை நீட்டியதையெல்லாம் மறுக்காமல் பெற்றுத் தந்த அவ்வன்னையின் அருமுயற்சி அத்திருமணத்தைக் கை கூடச் செய்திருக்கலாம். நடந்தது எதுவாயிருப்பினும், தோழிக்கும் தலைவிக்குமான உரையாடலாய் காட்சியளிக்கும் இப்பாடலின் சுட்டு விரல், 'வினவவும் செய்யாது சினக்கவும் செய்யாது' மெளனமாய் விலகிப் போன தாயின் மனமுதிர்வையே மீண்டும் மீண்டும் சுட்டி நிற்பதாய் தோன்றுகிறதெனக்கு.
பின்குறிப்பு: கட்டுரையின் தலைப்பு மற்றுமோர் சங்கப்பாடலில் இடம் பெறும் வரியாகும் . மகளை போலியாய் மிரட்டி அடிக்க முற்படும் தாயொருத்தி மகளுக்கு வலிக்காமல் இருப்பதற்காக நுனியில் பூக்களைக் கொண்ட சிறு கிளையை ஒடித்து வைத்திருப்பதை "பூத்தலைச் சிறுகோல்" என்று குறுகத் தரித்த கவிச்சொல்லாக்கி அன்னையின் பரிவை அழகாய்ப் புலப்படுத்தியிருப்பதால் எங்களுக்கு மிகப் பிடித்த வரி.
13 கருத்துகள்:
தலைப்பை போல் பதிவும் இனிமை :)
வாவ்! ரொம்ப நல்லா இருக்கு காயத்ரி. அந்தக் காலத்தில் ஆண்களின் பெர்ஃபியூம் முல்லைப்பூ போலும் :)
தேவதச்சனின் இந்தக் கவிதையும் நினைவுக்கு வந்தது.
நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்
ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொள வென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்
காயத்ரி, உங்களுடையதும் எங்களுடையதும் ஓரே மாதிரியானவை என்பதால் இன்னமும் நெருக்கமாக உணர முடிந்தது. ரசித்து படித்தேன்.
அருமை..
// எந்த சலனமும் இல்லை. ஆனால் இப்போது யோசித்தால் அன்றிரவு அவர்கள் நிம்மதியாகத் தூங்கியிருப்பார்கள் என்று தோன்றவில்லை.//
ஆமாங்க உண்மை தான்
சித்துவ நினச்சு ரொமப கவலபட்டிருக்கலாம் :-))
அருமை :-))
காயத்ரி,
கடிதோச்சி மெல்ல எறிகன்னு சொன்ன வள்ளுவர் ஞாபகம் வருது, தலைப்பையும் அதன் விளக்கத்தையும் படிக்கும்போது
அருமை.
எளிமை.
புலமை.
வாழ்த்துகள்.
அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு தாய் இருந்திருக்க கூடும் என்ற விவரத்தையும், அதற்கு அடையாளமாய் சங்கப் பாடலையும், தங்களின் தற்போதைய உணர்வோடு தொடர்பு படுத்தி வெகு அழகா சொல்லி இருக்கீங்க காயத்ரி... மகளாய் இருந்தபோது போல இல்லாமல் ஒரு தாயாய் நிற்கையில் வருகிற பதட்டம் சத்தியம்.
மிகவும் அருமை தோழி! மிகவும் ரசித்தேன்~
மிக நன்றாக இருந்தது காயத்ரி, சங்க இலக்கிய பாடல்களின் சம்பவங்களை,தற்போது உங்கள் வாழ்வின் சம்பவங்களோடு தொடர்புபடுத்தி விளக்கும்
போது அத்தாயின் உணர்வுகளை மிக நெருக்கமாக உணரமுடிகிறது. வாழ்த்துகள்!!!!
மிக நன்றாக இருந்தது காயத்ரி, சங்க இலக்கிய பாடல்களின் சம்பவங்களை,தற்போது உங்கள் வாழ்வின் சம்பவங்களோடு தொடர்புபடுத்தி விளக்கும்
போது அத்தாயின் உணர்வுகளை மிக நெருக்கமாக உணரமுடிகிறது. வாழ்த்துகள்!!!
அருமை! அற்புதம்! அட்டகாசம்!
'வினவவும் செய்யாது சினக்கவும் செய்யாது' மெளனமாய் விலகிப் போன தாயின் மனமுதிர்வையே மீண்டும் மீண்டும் சுட்டி நிற்பதாய் தோன்றுகிறதெனக்கு. || :)
கருத்துரையிடுக