புதன், 30 டிசம்பர், 2009

உறக்கமற்ற காத்திருப்பு.... - 2

மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.

-ஔவையார் (குறுந்தொகை 28 - பாலை - தலைவி கூற்று )


முட்டுவேனா? தாக்குவேனா? தெரியவில்லை
நானுமோர் தன்மை மிகுந்து ஆ அ ஓ என அலறுவேனா?
மெல்லிய காற்று கூட அலைக்கழிக்கும் அளவிற்கு என்னை
துக்கம் நோயாக பீடித்திருப்பதை
அறியாது உறங்கும் இந்த ஊரை என்ன செய்வேன்?




ஜார்ஜ் எல். ஹார்ட்டுடனான பேட்டி ஒன்றில் (அ. முத்துலிங்கம் எடுத்தது என நினைக்கிறேன்), இந்த பாடலைப் பற்றி பேச்சு வந்தது. பேட்டியாளர் இந்த பாடல் விரகதாபத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் காமத்தின் வெளிப்பாடே என்றார் (உண்மையில் இன்னும் கீழிறங்கி, ஒரு பெண் சுய இன்பம் கொள்வதன் விவரிப்பே இப்பாடல் என்றார்). ஹார்ட் என்ன பதிலளித்தார் என நினைவில் இல்லை. இது ஒரு வாசிப்பு.

இப்பாடலை காமத்தின் வெளிப்பாடாக காண்பது சரியா தவறா என்ற கேள்விக்கு எந்த பொருளும் இல்லை. அந்த வாசிப்பிற்கான சாத்தியங்களும் இந்த பாடலில் உள்ளன என்பது உண்மையே.

இந்தப் பாடலை சுற்றியுள்ள தகவல்களை எடுத்துக்கொள்வோம். பாலை நிலப்பாடல் இது. பாலை பிரிவிற்கான நிலம். ஆக இந்த பாடல் ஓர் பிரிவை பேசுகிறது. தலைவி கூற்றாக வரும் பாடல் இது. தலைவனின் பிரிவு துயர் தாளாத தலைவின் புலம்பல். இந்த புலம்பல் உடல் சார்ந்த வெளிப்பாடாக வருகிறது பாடலில் : முட்டுதல், தாக்குதல் என. இந்த புள்ளியிலிருந்து காமத்தை சென்றடைவது வெகு இயல்பான ஒரு வாசிப்பே....

ஆனால் எனக்கு இந்த பாடல் ஒரு தற்காலிக பிரிவை மட்டும் சொல்வதாக படவில்லை. அதனினும் ஆழமாக ஓர் பிரிவின் ஆற்றாமை தெரிகிறது அதில். இதோ இந்த வாரம் ஆழிப்பேரலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் வந்து போனது. தொலைகாட்சி செய்தியில் ஒரு காட்சியை காண்பித்தார்கள். ஆழிப்பேரலை அடித்து ஓய்ந்த மறுதினம் எடுக்கப்பட்ட காட்சி. ஓர் அறையில் பிணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்கின்றன. மெலிந்து காணப்பட்ட ஒரு பெண் அந்த அறையை சுற்றி சுற்றி வருகிறாள். அவளது கைகள் மார்பை அறைந்தபடி உள்ளன. ஐயோ ஐயோ என்ற கதறல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இன்று இந்த பாடலை படித்த பொழுது அந்த ஐயோ என்ற கதறல் அதே வீச்சுடன் ஒலித்து கனமேற்றுகிறது மனதை. இறந்தது யார் என நமக்கு தெரியாது. அவளது கணவனாக இருக்கலாம். மகனோ மகளோவாக இருக்கலாம். அல்லது இவர்கள் அனைவருமாக.

அன்றிரவு அந்த பெண் எங்கிருந்திருப்பாள்? என்ன நினைத்திருப்பாள்? அவளும் இப்படித்தானே ஆற்றாமையில் சென்று முட்டியிருப்பாள்? அவளது துயரறியாது உறங்கும் இந்த உலகே பகையாக தோன்றியிருக்காதா அவளுக்கு?

பிரிவு ஓர் இரவு மிருகம். அது தனது ஆதிக்கம் முழுவதையும் மகா வீரியத்தோடு செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் முடிவின்றி நீளும் உறக்கமற்ற இரவுகளும், விடியலுக்கான காத்திருப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் போலும்.


ஞாயிறு, 27 டிசம்பர், 2009

வெளியெங்கும் நினைவின் திறவுகோல்கள்

அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.


- மனுஷ்யபுத்திரன்


காதலோ, நட்போ, உறவோ, உயிரோ எதுவாயினும், நாம் நேசித்த அல்லது நம்மை நேசித்த ஒன்று இல்லாமலாகும் போது இப்படி ஒரு வெற்றிடம் உருவாவது தவிர்க்க முடியாததாகிறது.  அகப்பட்ட இரையை வெகு நிதானமாய் விழுங்கத் தொடங்கும் பாம்பைப் போல… வெட்டுப்பட்ட காயத்தினின்று உடலெங்கும் பரவத் தொடங்கும் வலியைப் போல, வாழ்வின் எஞ்சிய பகுதிகள் அனைத்திலும் விரவத் துவங்குகிறது இழப்பின் துயரம்.

"வெளியெங்கும் நினைவின் திறவுகோல்கள்" என்பார் சித்தார்த். நிஜம் தான். மண்ணூன்றிக் காத்திருந்த வித்து மழையின் எந்தத் துளி பட்டு முளைவிட்டதென்பதை அறியவியலாதது போலவே, மனதில் புதைந்த துயரங்கள் நினைவின் எந்தக் கொழுமுனையில் சிக்கி மேலெழும் என்பதை எவராலும் அறிய முடிவதில்லை.  எங்கெங்கோ அறுபட்டு விழுந்த நினைவின் கண்ணிகளை, எதோவோர் புள்ளியில் நின்றபடி இடையறாது கோர்க்க முயன்று கொண்டேயிருக்கிறது மனதின் மாயக் கரம் ஒன்று.

எங்கு சென்றாலும் சமுத்திரத்தின் இரைச்சலை சுமந்து செல்லும் சங்குகளைப் போன்றே எத்தனை ஆண்டுகள் கடந்தும் மனித உணர்ச்சிகளை சுமந்து திரியும் நம் செவ்விலக்கியங்கள் அதிகம் பிரதிபலிப்பது இழப்பின் பெருவலியை மட்டுமே என்பேன் நான். சங்க இலக்கியங்களில் பிரிவையும் இழப்பையும் சொல்லும் பாலைப் பாடல்களே மிகுதியும் இடம்பெற்றிருப்பதற்கான காரணம் எதுவாக இருக்கக் கூடும்? 'சொற்களின் அகல் ஏற்றி எத்தனை திருக்கார்த்திகை!' என்பார் கல்யாண்ஜி. எத்தனை முறை மாய்ந்து மாய்ந்து சொன்னாலும் வலிகளை வார்த்தைகளில் வடிப்பது சிரமம் தானில்லயா? மீண்டும் மீண்டும் சொல்ல முயன்று சொல்ல முடியாமல் போன இயலாமை தான் நம் முன்னால் பாடல்களாய் உருப்பெற்றிருக்கின்றனவோ? அப்படி ஒரு இயலாமையின் பரு வடிவம் தான் இந்தப் பாடலும்.


"இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?"


- புறம் 242

வலிமையான வேலும் வீரமும் கொண்ட சாத்தன் என்பவன் இறந்துவிட்டான். அவன், 'ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்தவன்'.  ஆண்மை என்ற சொல்லுக்கு ஆளும் தன்மை என்பதே சரியான பொருள். ஆள்வது என்பது அடக்குமுறையோ அடிமைப்படுத்துவதோ அல்ல. அன்பாலும் அழகாலும் குணத்தாலும் திறமையாலும் மனத்தாலும் மொழியாலும் நம்மை தினமும் ஆள்பவர்கள் எத்தனையெத்தனை பேர்!  அப்படி ஆளும் தன்மையே ஆண்மை. அத்தகைய ஆண்மை விளங்க, தன்னையொத்த பிற ஆடவர்களை எல்லாம் கடந்து முதன்மையானவனாய் முன் நின்ற சாத்தன் என்பவன் இறந்து போய் விட்டான்.

அவனை இழந்த துக்கம் ஊர் மக்களை இருள் போல் சூழ்ந்திருக்கிறது. ஒல்லையூர் என்னும் அவ்வூரிலிருக்கும் எந்த இளம் பிள்ளைகளும் இன்று பூப்பறித்து சூடிக் கொள்ளப் போவதில்லை. வளையல்களை அணிந்த மகளிர் எவரும் பூக்கொய்து தொடுக்கப் போவதில்லை. நல்ல யாழினை இசைக்கும் பாணனோ(இசைப் பாடகன்) அவன் துணையான பாடினியோ பூவை அணிந்து கொள்ளப் போவதில்லை. இப்படி எவருக்கும் பயனற்ற அகால வேளையில் முல்லையே  நீ எதற்காகப் பூத்தாய்? என்கிறார் புலவர்.

இலையில் தேங்கிய மழைத்துளிகளாய்  பாடலின் கடைசி வரியில் எப்போதும் துயரம் சொட்டியபடியிருக்கிறது. முல்லை மலர்வதைப் பார்த்ததுண்டா நீங்கள்? முதலிரண்டு இதழ்கள் விரிந்ததும் அம்முகையில் ஒரு மென்னகை.. மெல்லியதாய் ஒரு முறுவல் தோன்றுவது போலிருக்கும்! ஊர் முழுவதும் சோகத்தில் மூழ்கியிருப்பதை அறியாமல் அப்பூ எப்போதும் போல அன்றும் புன்னகைக்கிறது. தாய் இறந்ததை அறியாமல் அவள் அருகிலேயே சிரித்து விளையாடும் பிள்ளையைக் கண்டாற் போல பூவைக் காணுந்தோறும் புலவரின் நெஞ்சம் துக்கத்தில் விம்முகிறது..  'முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?'

சாத்தனுக்கும் இப்பாடலை எழுதிய குடவாயிற் கீரத்தனாருக்கும் என்ன உறவென்பதற்கான தடயங்கள் எதுவும் பாடலில் இல்லை. நாற்புறமும் சட்டமிட்ட ஓவியத்தைப் போல ஒரு காட்சித் தீற்றலையும் அதிலிருந்து வானமாய் விரியும் வாசக வெளியையும் கொண்டிருக்கும் இப்பாடலை 'உலக இலக்கியத்தில் சேர வேண்டிய பாடல்' என்கிறார் எழுத்தாளர் சுஜாதா.

தன்னை ஓர் மரபுநேசன் என்று கூறிக்கொள்ளும் சுஜாதா, குறுந்தொகைக்கும் புறநானூற்றிற்கும் எழுதியிருக்கும் எளிய உரை நூல்கள், (401 காதல் கவிதைகள், புறநானூறு : ஓர் எளிய அறிமுகம்) சங்க இலக்கியத்தின் மீது முதற்கட்ட வாசிப்பை நிகழ்த்த விரும்பும் ஆரம்ப வாசகருக்கு புதிய வாசற்திறப்பாக அமையக் கூடும். (கவனம்.. இப்பரிந்துரை முதற்கட்ட வாசிப்பிற்கு மட்டுமே!)


புதன், 23 டிசம்பர், 2009

உறக்கமற்ற காத்திருப்பு - 1




குறுந்தொகையை வாசிக்க ஆரம்பித்த பொழுது அதன் வீரியம் என்னை அலைகழித்தது. எங்களை பிரித்த மிக நீண்ட காலவெளியான 2000 வருடங்கள் அதற்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. புத்தகம் ஒன்றின் பாதிப்பில் உறக்கம் கொள்ளாது தவித்த இரவில், நானும் காயத்ரியுமாய் சீறும் கடல் அலைகளின் முன்பாக நிற்கையில், மகனை பிரிந்த தாயினை திரைப்படம் ஒன்றில் காண நேர்கையில்... என எதிர்பாரா தருணங்களில் எல்லாம் என் முன் வந்து நின்றது குறுந்தொகை.

காதலர்களால் மட்டுமே காத்திருப்பை அதன் முடிவிலா வடிவில் உணர முடியும் என நான் அறிந்த நாளில், குறுந்தொகை எனக்கு மிக மிக அருகில் வந்துவிட்டிருந்தது. குறுந்தொகையை எனது அப்போதைய மனம் காத்திருப்பின் வாக்குமூலங்களின் தொகுப்பாக கண்டது. அந்த உந்துதலில் காத்திருப்பின் வலி ஏறிய குறுந்தொகை பாடல்களை தொகுத்து ”பண்புடன்” குழுமத்தில் இட்டேன். அதை தொடர் பதிவாக இங்கே இடுகிறேன்.


 நெய்தல் - தலைவி கூற்று


நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

-பதுமனார்.

நள்ளென்றன்றே யாமம் - வந்துவிட்டது இரவு.

சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் - சொற்கள் இல்லாதாகி மக்கள் இனிதாய் உறங்கிவிட்டனர்.

முனிவின்று நனந்தலை உலகமும் துஞ்சும் - கோபமோ வெறுப்போ இல்லாது நிம்மதியாக முழு உலகமும் உறங்குகிறது.

ஓர் யான் மன்ற துஞ்சாதேனே - நான் ஒருவள் மட்டும் உறங்காமல் இருக்கிறேன்.

இந்த கவிதை காத்திருப்பை பற்றித்தான் பேசுகிறது என்றே நம்புகிறேன். உலகம் முழுதும் உறங்குகையில் உறக்கம் கொள்ளாமல் தவிக்கும் ஒரு மனதின் புலம்பல் இந்த கவிதை. பெரும்பாலான குறுந்தொகை பாடல்களை போல இந்த பாடலும் மிக மிக குறைந்த புள்ளிகளை கொண்டு வரையப்பட்ட கோலமே. தகவல் என்று என்ன இருக்கிறது இந்த பாடலில்?  நீங்களெல்லாம் தூங்குகிறீர்கள்... நான் மட்டும் தூங்காதிருக்கிறேனே என்கிறாள்/ன். இப்பாடலை சுற்றி உள்ள தலைவி கூற்று, நெய்தல் திணை போன்ற மீதகவல்களை (metadata) எடுத்துவிடலாம். என்ன எஞ்சுகிறது? நாம் நம் அகம் கொண்டு கடக்கக்கூடிய ஒரு கவியனுபவம் மட்டும். அங்கிருந்து நாம் செல்லக்கூடிய தூரத்தை தீர்மானிப்பது நாமே. நாங்கள்  இக்கவிதை குறித்து பேசிக் கொண்டிருந்த போது தோன்றியவை...


* மக்கள் சொல்லவிந்தடங்கினரே என்று ஏன் சொல்ல வேண்டும்? இவளது மனதினுள் ஓயாமல் சொற்கள் பெருகியபடியே இருப்பதனால் தானோ?


* சொல்லற்ற தன்மையும், நிம்மதியான உறக்கமும் எனக்கு மட்டும் ஏன் வாய்க்கவில்லை என்ற துக்கம், அதற்கு என்ன அல்லது யார் காரணம் என்ற கேள்வி இந்த தலைவிக்கு மட்டும் உரியது தானா? நம்மில் ஒவ்வொருவரும் எதோவோர் பொழுதில் இத்துக்கத்தை உணர்ந்ததில்லையா?


* சிறிய சாளரம் வழியாக வானத்தை வேடிக்கை பார்ப்பது போல.. அவளது வாழ்க்கையை நாம் பார்க்க வாய்த்த சிறிய சன்னலே இந்த பாடல்.


* அந்த சன்னல் வழியாக  நாம் பார்க்கின்ற வாழ்க்கை ஆச்சரியகரமாக நம் வாழ்க்கையை போலவே இருக்கின்றது.. வானம் எல்லோருக்கும் ஒன்று தானே?


பேசி முடிக்கையில் முத்தாய்ப்பாய் ஒன்று தோன்றிற்று. கவிதையை வாசித்தல் என்பது அக்கவிதையின் பல்வேறு வகையான சாத்தியங்களை கண்டடையும் முயற்சி தானேயன்றி முழுமையான புரிதல் எவருக்கும் சாத்தியமில்லை.. படைப்பாளிக்கும் கூட.


செவ்வாய், 22 டிசம்பர், 2009

இரண்டாம் நுழைவாயில் (அல்லது) ஒற்றையடிப் பாதைகள்

இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் இந்த கட்டுரையை என் கணிணியில் சேமிக்க வேண்டும். கட்டுரைகளை சேமித்து வைப்பதற்கென்று “கட்டுரைகள்” என்ற அடைவை (folder) உருவாக்கி இருக்கிறேன். இந்த கோப்பை இன்றைய தேதியிட்டு அந்த அடைவினில் சேமித்து வைத்துவிடலாம். ஆனால், இக்கட்டுரையில் நான் ரசித்த சில கவிதைகள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளுக்கு என்று வேறு ஒரு அடைவு உள்ளது என் கணிணியில். கவிதைகளை அங்கு தான் சேமித்து வைப்பது வழக்கம். இக்கோப்பு ஒரே சமயம் கட்டுரையாகவும் கவிதையுமாக இருக்கிறது. இப்போது என்ன செய்ய ?

இப்பிரச்சனை நம் பெரும்பாலான பழந்தமிழ் பாடல் தொகுப்புகளுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியம் என்பது 2700 தனிபாடல்களின் தொகுப்பு. வசதிக்கான எட்டுத்தொகை என்றும் பத்துப்பாட்டு என்றும் தொகுத்து வைத்திருக்கின்றோம். ஆனால் இத்தொகுப்புகளுக்கு தேவைக்கதிகமான முக்கியத்துவத்தை அளிக்கும் தோறும் படைப்புகளின் தனித்துவத்தினை மறைக்கின்றோம். திருக்குறளை இன்னும் நீதி நூல் என்றே தொகுத்து வைத்திருக்கிறோம். மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல்தான் அதற்கு எத்தனை பாரம்! என்று ஒரு முறை எழுதினார் ஜெயமோகன். அது போல “கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது” என்ற அற்புத கவிதையின் மேல் “நீதிநூல்” என்ற அடையாளம் எத்தனை பாரமாய் தெரிகிறது... புறப்பொருளை பற்றி மட்டுமா பேசுகிறது புறநானூறு? எத்திசை செலினும் அத்திசை சோறே என்று ஔவை கூறும் பொழுது மிக மிக அந்தரங்கமான அவளது செருக்கும் அல்லவா வெளிப்படுகிறது? ”செங்களம் பட” என்று தொடங்கும் குறுந்தொகை பாடல் உக்கிரமான ஒரு போர்காட்சியை நம்முன் நிகழ்த்திக்காட்டுகிறது. சொல்லிக்கொண்டே போகலாம். படைப்புகளின் பல்வகையான அடையாளங்களை காண மறுத்து ஒற்றை அடையாளத்தை அதன் மீது ஏற்றுவது என்பது அப்படை ப்பின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாகவே இருக்கும்.

இக்கட்டுரையை என் கணிணியில் சேமிக்கும் பிரச்சனைக்கு வருவோம். இப்பொழுது என் கணிணியில் Leap என்ற ஒரு மென்பொருளை நிறுவியுள்ளேன். இது கோப்புகளின் மீது குறிச்சொற்களை ஏற்ற உதவுகிறது. இம்மென்பொருளின் துணைகொண்டு, எனது கட்டுரையின் மீது இரண்டு குறிச்சொற்களை ஏற்றிவிடலாம் - ”கட்டுரை”, “கவிதை” என்று. இனி இக்கோப்பை நான் எங்க வேண்டுமானாலும் சேமித்துக்கொள்ளலாம். இந்த கோப்பை அடைய எனக்கு இப்பொழுது இரண்டு வழிகள் உள்ளன. ”கட்டுரை” என்றோ “கவிதை” என்றோ தேடி இக்கோப்பை அடையலாம். இந்த கட்டுரையில் ஜெயமோகனின் ஒரு வரி மேற்கோள் காட்டப்படுவதால் “ஜெயமோகன்” என்ற குறிச்சொல்லையும் ஏற்றிவிடலாம்.

இதையே நம் கவிதைகளுக்கும் செய்யலாம். படைப்பு என்பது ஒரு பெருவனம். நாம் படைப்புகளை தொகுக்கும் முறை அவற்றை சுற்றி பெருமதில்களை எழுப்பி ஒற்றை நுழைவாயிலை கொஞ்சமாக திறந்து வைக்கிறது. ஒரு தனி மனிதனாக நான் அந்த பெரு வாயிலின் முன் நிற்க அஞ்சுகிறேன். திருக்குறள் ஒரு நீதிநூல், புறப்பொருள்களை பற்றி பேசுவது புறநானூறு, அகப்பொருள்களை பற்றி பேசுகிறது அகநானூறு போன்ற பொதுப்படையான அடையாளங்களை தாண்டி பார்க்க பழகிக்கொண்டால், அந்த பெரு மதில் இல்லாதாகி அந்த வனமே நம்முன் நிற்கும். வனத்திற்கு ஏது வாசல்? ஒவ்வொரு கவிதைக்கும் அதன் தனித்துவமான அடையாளங்களை குறிச்சொற்களாக ஏற்றி வைத்தால் பல்வேறு விதமான வாசிப்புகளை நிகழ்த்த ஏதுவானதாக இருக்கும். ஒவ்வொரு குறிச்சொல்லும் அந்த கவிதையெனும் வனத்தினுள் செல்லும் ஒற்றையடி பாதை. யாரும் எப்படியும் நுழையலாம். உள்நுழைந்த பின் உங்கள் வாழ்வு உங்களுக்கு அளித்த அனுபவங்களின் துணை கொண்டு புதிய பாதைகளை நீங்களே உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்.

பழந்தமிழ் பாடல்களின் மீது நானும் காயத்ரியும் நிகழ்த்தும் வாசிப்பை பதிவு செய்யவே இத்தளத்தை துவங்கியுள்ளோம். எங்களின் வாசிப்பு அந்த பாடல்களுக்குள் நுழையும் ஒற்றையடி பாதைகள் மட்டுமே. ஒரு தனி மனிதன், வனம் காண ஒற்றையடி பாதைகளே போதுமானது, பெருவழிகள் தேவையில்லை.