வெள்ளி, 8 ஜனவரி, 2010

இல்லை தவறவர்க்கு ஆயினும்..






வசதிக்கென ஒன்றுக்கிரண்டாக வாங்கி வைத்த சங்க இலக்கிய முழுத் தொகுப்பு நூல்கள் எட்டாத் தொலைவில் இருவேறு இடங்களில் தங்கிவிட, நினைவிலிருந்தும், இணையத்திலிருந்துமே கட்டுரைக்கான பாடல்களைத்  தேர்ந்து வருகிறேன். இம்முறை குறுந்தொகையா, புறநானூறா, நற்றிணையா எதைச் சொல்ல என்ற குழப்பத்திலிருக்கையில் 'என்னைச் சொல்லேன்' என்றாள் கோதை! பன்னிரு ஆழ்வார்களில் ஒருத்தியும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியுமான ஆண்டாள்.. அன்பால் இறைவனை ஆண்டவள் மட்டுமல்ல, எண்ணிலா இலக்கியங்களால் விரிந்து பரந்திருக்கும் தமிழின் மாபெரும் இலக்கியப் பரப்பில், வெறும் 173 பாடல்களை மட்டுமே கொண்டு என்றென்றும் தனியாட்சி செலுத்திக் கொண்டிருப்பவள்.

கோதையின் 'நாச்சியார் திருமொழியை'ப் படித்துவிட்டு காமம் மட்டுமே மிகுந்த விரகமும் விரசமுமான பாடல்கள் என்று கொச்சைப்படுத்துபவர்கள் உண்டு. ஆன்மா இறைவனை விடாது பற்றுவதை உணர்த்தப் பாடிய பாடல்கள் என அதற்குப் புனிதமேற்றிக் கொண்டாடும் வைணவர்கள் உண்டு. மார்கழி 30 நாட்களும் இறை மந்திரமெனக் கருதி திருப்பாவையை பொருளுணராதே பாடிப் பழகும் பக்தர்கள் பலர் உண்டு. ஆனால், அவள் கோபத்தையும், தாபத்தையும், ஊடலையும், நாணத்தையும் தன்னுணர்வாகக் கொண்டு, அவள் பாடல்களில் கொஞ்சிக் குழைந்து கசிந்துருகும் காதலை கவியனுபவமாகப் பெற வாய்த்தவர்களுக்கே அவளை மனதிற்கு மிக நெருங்கிய தோழியாக உணரும் வாய்ப்பு கிட்டுகிறது.

எனக்கு பொங்கிப் பெருகும் அவள் காதலை விடவும், கண்ணனின் உமிழ்நீரை சுவைக்க விரும்பும் தாபத்தை விடவும் எத்தனை புலம்பியும் தன்னிடம் வந்து சேராத கண்ணனிடம் அவள் கொள்ளும்  கோபம் தெவிட்டா உவகை தருகிறது! செல்லக் கோபங்களும், நெருங்குவதற்காகவே உருவாக்கிக் கொள்ளும் போலி விலகலும் இடைவெளிகளும், இல்லாத கோபத்திலிருந்து உருவாகும் பொய்யான வசைகளும்….  வள்ளுவர் ஏன் புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என ஊடலுக்கு மட்டுமே 3 அதிகாரங்களைப் படைத்தார் என்பதை காதலித்தவர்களால் மட்டுமே முழுமையாய் உணர இயலும்.

கீழ்வரும் பாடல் நாச்சியார் திருமொழியில் இடம்பெறுவது. திருமாலிருஞ்சோலையில் இருக்கும் பூக்கள் ஒவ்வொன்றிடமும் கண்ணனைக் காரணமாக்கிக் கோபித்துக் கொள்கிறாள் இந்த இளம்பெண்.

கார்க்கோடல் பூக்காள். கார்க் கடல்வண்ணன்என் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான்,
ஆர்க்கோ இனிநாம் பூசலிடுவது, அணிதுழாய்த்
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ. 

கார்க்கோடல் பூக்களே..கருநிறக் கடல்வண்ணன், உங்களுக்கெல்லாம் போர்க்கோலம் அணிவித்து என் மேல் போர் புரியும்படி அனுப்பிய கண்ணன் எங்கே போனான்? இனி யாரிடம் நான் கோபித்துக் கொள்வது? அவன் அணியும் துளசி மாலையின் பின்னே ஓடும் என் நெஞ்சத்தை தடுக்க முடியாதவளாயிருக்கிறேன்.. ஐயோ!

கார்க்கோடல் பூ என்பது கருங்காந்தள் மலர்.. மிக அரிதானது என்ற தகவல் உரையில் கிடைக்கிறது. (எத்தனை தேடியும் கூகுளாண்டவர் செங்காந்தளையும், வெண் காந்தளையுமே மீண்டும் மீண்டும் கொண்டு வந்து நீட்டுகிறார்.. கருங்காந்தள் புகைப்படம் எவருக்கேனும் கிடைத்தால் அறியத் தரவும்.)

கருங்காந்தள் மலர், கருமை நிறமுடையதாக பூத்திருப்பதைத் தவிர்த்து வேறு பிழையொன்றும் செய்யவில்லை. ஆனால் கண்ணன் என்னும் கருந்தெய்வத்தை  தன் நிறத்தால் ஓயாமல் நினைவூட்டிக் கொண்டிருப்பதனால், கோதை கோபம் கொள்கிறாள்.  அப்பூவின் மீதும், அப்பூவை தன் வண்ணத்திலேயே படைத்து விட்டு தான் மட்டும் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் கண்ணனின் மீதும் அக்கோபம் படர்கிறது. அவன் ஒளிந்து கொண்டிருப்பதனால் எய்தவனை விட்டு விட்டு இந்த மலரம்புகளைக் கோபிக்கத் துவங்குகிறாள். 'உமக்கு போர்க்கோலம் அணிவித்து என் மேல் போரிடும்படி அனுப்பியவன் எங்கே போய்த் தொலைந்தான்?'.. என்று.

போர்க்கோலம் என்பது என்ன? வாளும், வேலும் சுமந்து கவசமணிந்து நிற்பதா? விரிந்து மலர்ந்து மென்மையின் உருவாய்  நிற்கும் பூக்களுக்கும் போருக்கும் என்ன தொடர்பு? இங்கே போர் அவள் உள்ளத்தில் நிகழ்கிறது. அவளின் அகம் ஒரு அணியிலும், கண்ணனை நினைவூட்டும் புறவுலகம் மொத்தமுமாய்த் திரண்டு மற்றோர் அணியிலும் நின்று சதா சர்வ காலமும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கும் மாயப் போர் அது. எதிரணியின் தலைவன் என்று தானே போர்க்களம் புக வருகிறானோ அன்று மட்டுமே முடிவிற்கு வரக் கூடிய போர். அன்று இருமைகள் மறைந்து அனைத்தும் ஒன்றேயாகத் துலங்கும்!

அவனை நினைத்து மறுகும் மனது, அவனை நினைவூட்டுபவர்களை எல்லாம் வசைபாடும் மனது..  அதே சமயம் அவன் அணிந்த துளசி மாலையைக் கண்டதுமே குழைந்துருகி பின்னே செல்லும் நெகிழ்வு.. இந்த விசித்திரத்திற்குத் தான் காதல் என்று பெயரோ?

பூக்களிடம், அவள் துவக்கும் உரையாடல் கோபத்தில் துவங்கி, வீம்பாய் வளர்ந்து, என்ன செய்தாலும் அவனை தன்னால் வெறுக்கவியலாது என்ற தன்னிரக்கத்தில் வீழ்கிறது…. ஊடலில் துவளும் பெண்மனதின் நகர்வுகளைத் துல்லியமாய் புலப்படுத்தும் மிக அழகான வரைபடம் இப்பாடல். இதே வரிசையிலமைந்த இதர பாடல்கள் இங்கே.

19 கருத்துகள்:

chandru / RVC சொன்னது…

இம்மாதிரியான பாடல்களை படிப்பதே பேரானந்தம். பகிர்வுக்கு நன்றி

MyFriend சொன்னது…

எழுத்துக்கள் பார்க்க அழகாய் இருக்கிறது..








இதுக்கு மேலே என்ன சொல்றதுன்னே தெரியல.. பதிவை பார்த்து கண் கலங்கிட்டேன்.. ஏன்னு உங்களுக்குதான் தெரியுமே! கண்டுபிடிங்க பார்க்கலாம். :-)

இராவணன் சொன்னது…

//வள்ளுவர் ஏன் புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என ஊடலுக்கு மட்டுமே 3 அதிகாரங்களைப் படைத்தார் என்பதை காதலித்தவர்களால் மட்டுமே முழுமையாய் உணர இயலும்.//

ம்ம்ம்மம்ம். ஒரு வேளை வள்ளுவர் என்பதும் ஒரு பெண்ணாக இருக்க க்கூடுமோ.முக்கியமாக இந்த அதிகாரங்கள் எழுதியவர். :)

// ஊடலில் துவளும் பெண்மனதின் நகர்வுகளைத் துல்லியமாய் புலப்படுத்தும் மிக அழகான வரைபடம் இப்பாடல்//

ம்ம்ம்ம்

பெயரில்லா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி..

Iyappan Krishnan சொன்னது…

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ.. ?

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் !!

காயத்ரி சித்தார்த் சொன்னது…

//இம்மாதிரியான பாடல்களை படிப்பதே பேரானந்தம். //

உண்மை சந்துரு.. அதனால் தான் கற்றது விரித்துரைக்கும் தளமாக அணிலாடு முன்றிலை பாவித்து வருகிறோம். நன்றி வருகைக்கு!

காயத்ரி சித்தார்த் சொன்னது…

@ மைஃப்ரண்ட்..

பிசாசு..! வேறென்னத்த சொல்ல.. :)

குப்பன்.யாஹூ சொன்னது…

பகிர்வுக்கு மிகுந்த நன்றி,

நீங்கள் இது போல நிறைய ஆன்மிகம் சார்ந்த இலக்கியங்கள் பற்றி எழுத வேண்டுகிறேன், (தேவாரம், திருவாசகம், அப்பர், சுந்தரர் பாடல்கள் பற்றியும் ).

சுஜாதா, பால குமாரன் எல்லாம் கடைசி காலத்தில் இதை தொட்டதால் அவர்களால் முழுமையாக எழுத முடிய வில்லை.

I am unable to follow your blog, please have that provision.

காயத்ரி சித்தார்த் சொன்னது…

//ம்ம்ம்மம்ம். ஒரு வேளை வள்ளுவர் என்பதும் ஒரு பெண்ணாக இருக்க க்கூடுமோ.முக்கியமாக இந்த அதிகாரங்கள் எழுதியவர். :)//

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

:) இதையும் ஒரு பெண் தான் எழுதியிருக்கனும்னு தோணுதா லக்ஷ்மண்?

காயத்ரி சித்தார்த் சொன்னது…

புனிதா.. ஜீவ்ஸ் அண்னா நன்றி!

@ குப்பன் யாஹு..

இது வரை எவற்றைச் சொல்வது என்ற எல்லை எதுவும் வரையறுத்துக் கொள்ளவில்லை. முயற்சிக்கிறோம்.

followers gadget ஐ இந்த வலைப்பூவில் இணைக்க இயலவில்லை. விரைவில் சரி செய்ய முயல்கிறோம். நீங்கள் கூகுள் ரீடரைப் பயன்படுத்துவதில்லையா?

பாஞ்சாலன் சொன்னது…

மிக அருமையான பதிவு!!! ஆண்டாள் கண்ணனின் மேல் காதல் கொண்டு கசிந்துருகி பாடுவதை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.ஓர் பெண்ணின் பார்வையில், காதலில் இறைவனை அணுகும் பாடல்கள் சுமார் 1200 ஆண்டுகள் முன்பு மிகவும் அரிது. இறைவனை பல்வேறு கோணங்களில் கண்டு, பாடி,பாதுகாத்த ஓர் மாபெரும் சமூகத்தின் அங்கமாய் நானும் உள்ளேன் என்பதில் பெருமை கொண்டுள்ளான் இச்சிறுவன்.

பாஞ்சாலன் சொன்னது…

மிக அருமையான பதிவு!!! ஆண்டாள் கண்ணனின் மேல் காதல் கொண்டு கசிந்துருகி பாடுவதை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.ஓர் பெண்ணின் பார்வையில், காதலில் இறைவனை அணுகும் பாடல்கள் சுமார் 1200 ஆண்டுகள் முன்பு மிகவும் அரிது. இறைவனை பல்வேறு கோணங்களில் கண்டு, பாடி,பாதுகாத்த ஓர் மாபெரும் சமூகத்தின் அங்கமாய் நானும் உள்ளேன் என்பதில் பெருமை கொண்டுள்ளான் இச்சிறுவன்.

selventhiran சொன்னது…

ரசித்துப் படித்தேன். நன்றாக இருந்தது.

உண்மைத்தமிழன் சொன்னது…

அடடா.. கவிதாயினி கலக்கலில் இறங்கியிருக்கிறார்களே..!

ஆண்கள் இதேபோல் பெண்களை காமத்துடன் வர்ணித்த கவிதைகளையெல்லாம் உச்சுக் கொட்டி படித்த இந்தச் சமூகம்தான் காலம்காலமாக ஆண்டாளின் மேல் இந்தக் கொடுமையைச் சுமத்திக் கொண்டிருக்கிறது..!

ம்ஹும்.. ஆண்டாளுக்கு அட்வகேட் யாருமில்லையே.. என்ன செய்யறது..?

நர்சிம் சொன்னது…

நன்றிங்க.

anujanya சொன்னது…

ரொம்ப நல்லா எழுதி இருக்கிறீர்கள்.

அனுஜன்யா

manjoorraja சொன்னது…

அருமையான விளக்கம். செழிப்பான உரை.

பாராட்டுகள்.

தொடரவும்.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

அன்பும் வழியும் எழுத்து...நன்றியும் பாராட்டும்..

பொண்ணு அம்மா ஆயாச்சா?

:))

சங்கடம் இருந்தால் பிரசுரிக்க வேண்டாம்மா..
:)

பெயரில்லா சொன்னது…

அவளின் அகம் ஒரு அணியிலும், கண்ணனை நினைவூட்டும் புறவுலகம் மொத்தமுமாய்த் திரண்டு மற்றோர் அணியிலும் நின்று சதா சர்வ காலமும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கும் மாயப் போர் அது.....nice