வெள்ளி, 16 நவம்பர், 2012

கண் களவு கொள்ளும் சிறு நோக்கம்..



அது ஒரு கவிதை. கவிதை கூட அல்ல.. ஓர் அந்தரங்க உரையாடல். காதலியாகப் போகும் பெண்ணுக்கும் அவளைக் காதலித்துக் கொண்டிருக்கும் ஆணுக்குமிடையேயானது. காதலும், குறும்பும், இளமைக்கேயுரிய துடுக்குத் தனமும், கொஞ்சலும், மயக்கங்களும் நிரம்பியது. கலைடாஸ்கோப்பில் நிரப்பிய வளையல் துண்டுகள் போல கூடியும் கலைந்தும் வர்ணஜாலமிடும் இவ்வரிகளை அடிக்கடி முணுமுணுத்தபடியிருக்கிறது மனது.

 முதலில், குறும்பு கொப்பளிக்கும் கண்களும் இளமை ததும்பும் முகமுமாய் துறுதுறுவென்றிருக்கும் 21 - 25 வயது இளைஞன் ஒருவனை கற்பனை செய்து கொள்ளுங்கள். இயலாதவர்கள் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் - தெலுங்கு பட சித்தார்த்தையோ, மெளனராகம் கார்த்திக்கையோ உருவகித்துக் கொள்ளலாம். காதலியாக எதோவொரு பாவாடை தாவணி நாயகி. அவள், கொஞ்சம் பயமும், கொஞ்சம் நாணமும், கொஞ்சம் பாவனைகளும்,  அவளே இன்னும் அறிந்திராமல் அகத்தில் ஒளிந்திருக்கும் காதலும், நிறைய பொய்க்கோபங்களும் பிரதிபலிக்கும் இளம்பெண்ணாக இருக்க வேண்டும். என்னவோ.. இந்தப் பாடலைப் படிக்கும் போதெல்லாம் வானின் நீலத்தில் பாதம் தொட்டுரசும் பாவாடையும், கடற்பச்சை நிறத்தில்  நறுமணப் புகை போல காற்றில் அசையும் தாவணியும் அணிந்த 18 வயதுப் பெண்ணொருத்தி என் கற்பனையில் தோன்றுவாள். அவளின் பொய்யான அலட்டலும், முகச்சுளிப்பும், உதடுகளின் விளிம்பில் மெலிதாய்த் தொக்கி நிற்கும் புன்னகையும், கோபமென்றும் நாணமென்றும் பிரித்தறியவியலாத கன்னச்சிவப்பும் ஒரு புகைப்படம் போல இப்பாடலில் உறைந்திருப்பதாய்த் தோன்றும். 

முதலில் பாடலைப் படித்து விடுங்கள்..

ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு 
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் 

'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் 5

புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா!
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா 

செய்வது நன்று ஆமோ மற்று?'
சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10

உண்பவோ, நீர் உண்பவர்?
செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா? 

'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று; 15
'அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி, 

கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.


-கலித்தொகை 62,  கபிலர், குறிஞ்சி திணை 26, 

விளக்கம் :

பெண் :
”ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்”


 ஏய்... இவன் ஒருத்தன்.. வெட்கமில்லாதவன்.. தன் மேல் விருப்பமில்லை என்று சொல்பவளையும் வலிந்து கைப்பற்ற நினைக்கிறானே?

ஆண் : 'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான்
புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா!

விருப்பம், விருப்பமின்மை பற்றியெல்லாம் நீ தெரிந்து வைத்துக் கொள். எனக்கு அது பற்றியெல்லாம் அறியத் தேவையில்லை. பூக்கள் பூத்த மெல்லிய கொடி போன்றவளே.. உன்னைத் தழுவுவது எனக்கு இன்பமாய் இருப்பதால் தழுவினேன்.

பெண் : “
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?' ”

நமக்கு இன்பமாக இருக்கிறது என்பதற்காக வலிந்து மற்றவர்க்கு துன்பம் விளைவிப்பது நல்லதா?

 
ஆண் : சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று
உண்பவோ, நீர் உண்பவர்?
செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று”

சுடர் போன்று மின்னும் வளையல் அணிந்தவளே! உன் பேரறிவை ஒதுக்கி வைத்து விட்டு நான் சொல்வதைக் கேள். தாகத்திலிருப்பவர்கள் தமக்கு இனிமையாக இருக்கிறது என்றுதான் நீர் அருந்துவார்களே தவிர நீருக்கு இனிதாக இருக்கட்டும் என்றா அருந்துவார்கள்? நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை.. என்ன செய்வேன் நான்? ஐந்து தலைப் பாம்பின் வாயில் மாட்டிக் கொண்டு நைபவன் போலிருக்கிறேன். குறையில்லாத நிலவைப் போல அழகு முகமுடைய பெண்களை, வலுவில் கவர்ந்து கொள்ளுதலும் கூட அறம் தான் தெரியுமா?

பெண் : (தனக்குள்ளேயே)  ”
அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.”

இதுவும் அறம் தானோ? அதோடு இவன் நாம் சொல்வதைக் கேட்க மாட்டான். நம்மையே நினைத்து தன்னை வருத்திக் கொள்வான். முற்பிறவியிலும் கூட நாமும் அவனும் வேறல்ல என்றே தோன்றுவதால் அவனுக்கு மறுப்புச் சொல்ல நமக்கேதும் காரணம் இருக்கிறதா மனமே?
 

அப்பா! எத்தனை நளினமிக்க நாடகம் இது. எந்தப் பெண்ணும் அறிமுகமில்லாத ஒருவன் திடீரென்று கட்டிப்பிடித்தவுடன் அவனை காதலித்துவிடப் போவதில்லை. அவன் “இதுவும் அறம் தான்” என்று சொன்னவுடன் “அப்படித்தான் போல” என்று அப்பாவியாய் நம்பி விடப் போவதில்லை. நம்பிய கணத்திலேயே  காலம் காலமாய் ஒன்றாய் வாழ்ந்த உணர்வோடு மனம் ஒன்றி விடப் போவதில்லை. அப்படியானால் இந்தக் கவிதையின் மெல்லிய மாயத்திரைக்குப் பின்னால் ஒளிந்திருப்பது எது? 

அவன் எத்தனை நாட்களாய் அவளைப் பின் தொடர்ந்தானோ?  அனுப்பிய தூதுகள் எத்தனையோ? அவர்களுக்குள் எத்தனை ரகசிய பார்வைப் பரிமாற்றங்களோ?  ஒரு கடைவிழிப் பார்வையின் மூலமாகவோ இதழோரம் பூத்து உதிராமல் காத்த புன்னகையின் வாயிலாகவோ அவள் சம்மதம் சொன்ன கணம் எதுவோ? எதையும் இந்தப் பாடல் சொல்லவில்லை... ஆனால் சொல்லாமலேயே பலவற்றை உணர வைக்கிறது. பேருந்தின்  ஜன்னல் வழியே எவருமறியாமல் வானம் நோக்கிப் புன்னகைத்துக் கொள்ளும் பெண்ணைப் போல, மெளனத்தைச் சுமந்திருக்கும்  இசை போல,  ஆயிரம் கதவுகளுக்குப் பொருந்தும் ஒற்றைச் சாவி போல, காட்டைப் பொதிந்திருக்கும் விதை போல பரிமளிக்கும் இக்கவிதை, எப்போதும் நாடகத்தின் இறுதிக் காட்சியின் போது அரங்கிற்குள் நுழையும் உணர்வையே தருகிறது.

வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று
உண்பவோ, நீர் உண்பவர்?

என்ற வரிகளுக்கு விளக்கம் எழுதுகையில் பொருளை மீறி வார்த்தைகள் எஞ்சி விடாமலிருக்க மிகுந்த பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. எத்தனை செறிவான சொற்களை, உவமைகளை அநாயசமாகக் கையாண்டிருக்கிறார்கள் இந்தப் புலவர்கள்! ஆனால் இந்தக் கட்டுரையை முடிக்கும் தறுவாயில், மொத்தம் 15 வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் இச்சேதியை வெறும் ஒன்னரை வரிகளில் சொல்லிச் சென்ற மனிதரின் நினைவு வருகிறது.

“செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு”

கோபமற்ற ஏச்சுக்களும் பகைத்துக் கொண்டவர் போன்ற பார்வையும் விரும்பாதவர் போன்று நடித்துக் கொண்டே உள்ளூர விரும்பிக் கொண்டிருப்பவர்களின் காதலுக்கான அறிகுறிகள் என்கிறார். காய்ச்சிக் குறுக்கிய பாலை மேலும் சுண்டியது போல மேற்சொன்ன கவிதை இந்தக் குறளில் வாமனாவதாரம் எடுத்திருக்கிறது!

பிரமிப்பாயிருக்கிறது.. மொழியின் அடுக்குகளும், சார்ந்ததன் வண்ணமாகும் சொற்களின் சித்து விளையாட்டுக்களும் மீளா வியப்பிலாழ்த்துகின்றன. வார்த்தைகளையும் அர்த்தங்களையும் ஒரு குடுவையிலிட்டுக் குலுக்கினால் உணர்ச்சிகள் எப்படி வீழ்படிவாகின்றன? இலக்கியங்கள் கனவுகளை ஒத்தவை. அதிகாலையில் கண்ட கனவு பிற்பகலில் காட்சி மாறாமல் பலிப்பதை உணர்ந்தவன் எத்தகைய அதிர்வு கொள்வானோ அத்தகைய அதிர்வுகளை தொடர்ந்து வாசக நரம்புகளில் மீட்டிக் கொண்டே இருக்கின்றன. அதைத்தான் நாம் வாசிப்பின்பம் என்றும், ஒத்திசைவு என்றும் சில நேரங்களில் வாழ்க்கை என்றும் சொல்கிறோம்.